மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு, சிவசேனாவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் திரண்டு வருவதால், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏக்நாத் தலைமையில் 15 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாத்தியில் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் மும்பைக்கு வருமாறும் தங்களது கோரிக்கைகளை உத்தவ் தாக்கரேவிடம் மனம்விட்டு கூறுமாறும் அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லை.இந்த நிலையில்… குவஹாத்தியில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே முகாமின் 15 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர சட்டசபை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எழுத்துப்பூர்வ பதில்களை தாக்கல் செய்ய ஜூன் 27-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஏக்நாத் சிவசேனா பாலாசாஹிப் என்ற புதியகட்சியை தொடங்க திட்டமிட்ட நிலையில்…முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூடிய சிவசேனாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில், கட்சி அல்லது பாலாசாஹேப் தாக்கரேவின் பெயரைப் பயன்படுத்தி புதிய கட்சியை உருவாக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக குவஹாத்தியில் இருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது என்று இன்று புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் பாஜக அவர்களை பாதுகாக்கிறது என்பது தெளிவாகிறது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
-**வேந்தன்**