உக்ரைனில் ரஷ்யாவின் போர் முடிவடைய பல ஆண்டுகள் ஆகலாம் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா உக்ரேன் போரானது 115 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உலகில் உள்ள பல நாடுகளில் எவ்வளவு முயன்றும் ரஷ்யா உக்ரேன் மீது தாக்குதல்களை நிறுத்தவில்லை.
ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், உலகில் உள்ள பல நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளித்து வருகின்றன. தூரத்தில் இருக்கும் இடத்தை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் போன்ற ஆயுத உதவியை அமெரிக்கா நாடு உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், 10 ஆயிரம் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு 120 நாட்கள் ராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.
இந்த மாத இறுதியில் மாட்ரிட்டில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவு வழங்குவது குறித்த விவாதங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், “உக்ரேனிய ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவது, டான்பாஸ் பகுதியை ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். இந்த போர் முடிய பல ஆண்டுகள் ஆகலாம் என்பதற்கு நாம் தயாராக வேண்டும். உக்ரைனை ஆதரிப்பதை நாம் விட்டுவிடக் கூடாது. கடந்த மார்ச் மாதம் உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதையடுத்து உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டான்பாஸ் பகுதியில் ரஷ்யா மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது.” என்று கூறினார்.
.