டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்து நடந்ததும் துரிதமாகச் செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு சென்னை – தக்ஷிண் பாரத், கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் நேரில் பாராட்டு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற விபத்து பகுதியை லெப்டினன்ட் ஜெனரல் அருண், ராணுவ அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து, விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களுக்குச் சான்றிதழ் வழங்கி கவுரவபடுத்தினார். தீயணைப்பு, காவல்துறை, வனத்துறை அதிகாரிகளையும் அழைத்து அவர்களுக்குச் சால்வை போர்த்தி, பரிசு வழங்கினார்.
தொடர்ந்து நஞ்சப்பசத்திர மக்களுக்குக் கைகூப்பி நன்றி தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடிய லெப்டினண்ட் ஜெனரல் அருண், டிசம்பர் 8ஆம் தேதி நடந்த கோர விபத்தில் இந்த பகுதி மக்கள் சற்றும் யோசிக்காமல், தங்கள் வீடுகளிலிருந்து பெட்ஷீட், தண்ணீர் கொண்டு வந்து உதவியிருக்கிறீர்கள். உலகத்தில் எங்குத் தேடினாலும், இதுபோன்ற ஒரு உதவி, இதுபோன்ற ஒரு கிராம மக்கள் கிடைக்கமாட்டார்கள். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் செய்த வேலையை யாராலும் செய்ய முடியாது. விபத்து நடந்த 10ஆவது நிமிடத்தில் விரைந்து வந்து மக்கள் உதவிசெய்தனர். இப்படிப்பட்ட கிராம மக்கள் இருந்தால் இதே ராணுவ உடை அணிந்து 5,000 முறை கூட பணியாற்றுவோம். நஞ்சப்பசத்திரம் மக்களின் உதவிக்கு கைமாறாக எது செய்தாலும் அது ஈடாகாது.
இருந்தாலும், இந்த கிராம மக்களுக்கு ஒராண்டு முழுவதும் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன். 2022 டிசம்பர் 8ஆம் தேதி வரை, ஒவ்வொரு மாதமும், ஒரு மருத்துவர், செவிலியரை சிகிச்சைக்காக அனுப்புகிறேன். ராணுவத்தால் இந்த பகுதி மக்களுக்கு என்ன உதவு செய்யமுடியுமோ, அதைச் செய்கிறோம்” என்று கூறினார்.
பின்னர் அந்த பகுதி மக்களிடம் விபத்து குறித்துக் கேட்டறிந்தார். அப்போது விபத்து குறித்து காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்த நஞ்சப்பசத்திர மக்கள் இருவருக்கு 5000 ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த மக்கள் இல்லை என்றால், 14 பேரை இவ்வளவு வேகமாக மீட்டு அனுப்பியிருக்க முடியாது என்று ராணுவத்தினரும், காவல்துறையினரும் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள். குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
**-பிரியா**
�,