தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசின் இரண்டு விருதுகள்!

Published On:

| By Balaji

சுகாதாரத் துறையில் தமிழ்நாடு அரசின் சிறந்த செயல்பாடுகளுக்காக இரண்டு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது ஒன்றிய அரசு.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு ‘ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பிரச்சாரத்தை கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடத்தியது. இதில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து நலவாழ்வு மையங்களிலும் நடத்தப்படும் தொற்று அல்லாத நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்கான அமர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலக்குகள் வரையறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் ‘சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் பிரச்சாரம் செயல்படுத்தப்பட்டது.

இதில் தொற்று அல்லாத நோய்களுக்காக 29.88 லட்சம் பரிசோதனைகளை செய்து இந்திய அளவில் தமிழ்நாடு அரசு முதலிடத்தையும், ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக 85,514 அமர்வுகளை நடத்தி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விருதுகளை வழங்கினார். தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வட்டாரத்துக்கு உட்பட்ட அச்சனக்கல் துணை சுகாதார நிலையத்தில் களப் பணியாளர்களின் அணி மிகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக அச்சனக்கல் துணை சுகாதார நிலையத்துக்கு மிகச் சிறந்த துணை சுகாதார நலவாழ்வு மையத்துக்கான விருது வழங்கப்பட்டது.

தொற்று அல்லாத நோய்களை கண்டறிதலில் தமிழ்நாட்டுக்கு அடுத்தப்படியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share