தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 14) திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிவிட்டு, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தவர், அமமுக பற்றிய கேள்வி ஒன்றுக்கு, “அ.ம.மு.க. அடுத்த தேர்தலுக்குப்பின் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்திருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தினகரன், “ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். அமமுகவில் இருப்பது தொண்டர் படை! அம்மாவின் கட்சியை மீட்க போராடும் லட்சியப்படை! தேர்தல் அரசியலைத் தாண்டி இப்படை எப்போதும் களத்தில் நிற்கும்! பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை! ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும்! அதன்பிறகு என்னவாகும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நேற்று அமமுகவின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி அறிக்கை வெளியிட்ட தினகரன், “துரோகிகளைப் பொறுத்தமட்டில் ஆட்சி முடிந்ததும் கிடைத்தவரை லாபம் என்று மூட்டைக்கட்டி தோளில் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு அம்மாவின் கொள்கைகளைப் பற்றியும் கவலை இல்லை; தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் கவலை கிடையாது. சம்பந்திகளின் நலன், சகலபாடிகளின் வசதி வாய்ப்புகளைப் பற்றியே சிந்திக்கிற இவர்கள் இயக்கம் குறித்தும், நாட்டு மக்கள் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்? அதனால் ஆட்சியின் அந்திம நேரம் நெருங்கும் போது நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டதைப் போல சிதறத்தான் போகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
**-வேந்தன்**
�,