இரட்டை இலை சின்னத்தை முடக்க மீண்டும் முயற்சியா?

Published On:

| By Balaji

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது சசிகலா தனது காரில் அதிமுகவின் கொடியை கட்டியிருந்தார். இந்தக் காட்சி தமிழக அரசியல் வட்டாரத்திலும், அதிமுகவுக்குள்ளும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

சசிகலாவே திட்டமிட்டுத்தான் தனது காரில் அதிமுக கொடியை கட்டியிருக்கிறார் என்று மின்னம்பலத்தில், ‘காரில் அதிமுக கொடி- சசிகலாவின் முதல் மெசேஜ்’என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடித் திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சசிகலா கடந்த 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி சிறைக்கு செல்லும்போது அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார். 2016 டிசம்பர் மாதம் நடந்த அதிமுகவின் பொதுக்குழுவில் அவர் ஏகமனதாக தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பன்னீரின் தர்மயுத்தம், தினகரனின் வெளியேற்றம், ஆளுநர் வித்யாசகர்ராவ் முன்னிலையில் பன்னீர், எடப்பாடி இணைப்பு என பல திருப்பங்கள் அரங்கேறின. இந்நிலையில் அணிகள் இணைந்த பிறகு ஒரு பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள். இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கு இன்னும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. சசிகலா தரப்பினர் தங்கள் தரப்பில் ஏராளமான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதேபோல சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் சசிகலா இப்போது சிறையில் இருந்து வெளியே வந்ததும் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தும் வகையில் தானே பொதுச் செயலாளர் என்பதைத் தெரிவிக்கும் வகையில் காரில் அதிமுக கொடியைக் கட்டியிருந்தார். அதிமுகவில் தனது உரிமைப்போராட்டத்தை டிஸ்சார்ஜ் ஆன அடுத்த நொடியில் இருந்தே தொடங்கிவிட்ட சசிகலா… அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இந்தப்போராட்டத்தை முன்னெடுக்க உள்ளார்.

அதனால்தான் விக்டோரியா மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அதிமுகவை மீட்டெடுப்பதற்காகவே அமமுகவை தொடங்கினோம்” என்றும் இன்னும் ஒரு வாரத்துக்கு அரசியல் பேசாதீர்கள். சசிகலா ஓய்வில் இருக்கிறார். சென்னை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுக்கக் கூடாது என்று சசிகல தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு அதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவல் பரவுகிறது.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 2) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட,

“கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானவர்கள் அவர்கள். எம்ஜிஆர் கண்ட இரட்டைஇலை சின்னம். இந்த இயக்கத்தை முடக்கவேண்டும், சின்னத்தை முடக்க வேண்டும் என்று நினைப்பவர்களை தொண்டர்கள் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இரட்டை இலையை முடக்க எந்தக் கொம்பனாலும் முடியாது”என்றார்.

கடந்த மாதமே சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி நடப்பதாக பேசியிருந்தது குறிப்பிடத் தக்கது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share