பெப்பர் சால்ட் தினகரன்-கட்சியினருக்கு இட்ட கட்டளை!

politics

மார்ச் 25 முதல் கொரோனா பரவலைத் தடுக்க நாடே முழு முடக்கத்தில் இருக்கும் நிலையில், அரசின் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி பல அரசியல் தலைவர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனும், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபடி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சி ரீதியாக அல்லாமல் அரசு ரீதியாக ஆலோசனைக் கூட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்திவருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டம், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு என்று முகம் காட்டி வருகிறார். காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது சிதம்பரம் அருகே உள்ள கிராம வீட்டில் இருந்து தினமும் தொண்டர்களுடன் வீடியோவில் பேசி வருகிறார்.

ஆனால் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் இருந்து சூடான அறிக்கைகள் வருவதோடு சரி, அவரது முகத்தை பார்க்க முடியவில்லை என்று கட்சி நிர்வாகிகளே வருத்தத்தில் இருந்தார்கள். முகம் காட்டாதபோதும் அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும், தொண்டர்களை தொண்டு செய்யச் சொல்லியும் தொடர்ந்து அறிக்கைகள் விட்டு வருகிறார் தினகரன்.

நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு அரசியல் கட்சியினருக்கு தமிழக அரசு தடைபோட்டபோது அதைக் கண்டித்த தினகரன், ‘இந்த இக்கட்டான நேரத்தில் தனிமனித விலகல் மிக முக்கியமானது என்பதால் கூட்டம் சேருவதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளைத்தான் செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவிகளை வழங்கியபோது எந்தச் சிக்கலும் எழவில்லை. ஆனால், ஊரடங்கை மீறி கட்சித் தலைவர்களே நேரடியாக சென்று உதவிகள் வழங்கும் போது விதிகளுக்கு புறம்பாக தொண்டர்களும் அங்கே கூடுவதால் தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது’ என்று சொல்லி தான் வெளியே வராததற்கான காரணத்தையும் தொண்டர்களுக்கு புரிய வைத்தார்.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 29) ஆம் தேதி தினகரனை சில அமமுக நிர்வாகிகள் சந்தித்திருக்கிறார்கள். நிர்வாகிகளிடம் அலைபேசியில் பேசி வந்த தினகரன் நேற்று அவர்களில் சிலர் தன்னை சந்திக்க வாய்ப்பு கேட்டதும் கொடுத்திருக்கிறார். வீட்டில் சந்தித்த அவர்களிடம் “எல்லாரும் கவனமா இருங்க. வெள்ளம்,புயல்னா இந்நேரம் வேட்டியை மடிச்சுக் கட்டி நானே இறங்கியிருப்பேன். ஆனா, இது வேற மாதிரி தொற்று நோய். அதனால பொதுமக்கள் நன்மை கருதி ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கிறேன். முதல்ல உங்க குடும்பத்தை கவனிங்க, அப்புறம் அக்கம்பக்கத்துல கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ணுங்க. ஒவ்வொருத்தரும் இன்னொருத்தருக்கு உதவி பண்ணனும்குறதுல உறுதியா இருங்க.” என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறார் தினகரன்.

மேலும் அமமுகவினர் மாநிலம் முழுதும் செய்துவரும் உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பார்த்து வரும் தினகரன் அவ்வப்போது மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளையும் கூறி வருகிறார்.

லாக் டவுனால் ஷேவிங் செய்வதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டதால் பெப்பர் சால்ட் முகத்தோடு காட்சியளித்திருக்கிறார் தினகரன். அதை சிலர் அவரது அனுமதியோடு புகைப்படம் எடுத்து சமூக தளங்களில் பரப்பிவிட்டார்கள். இப்போது அமமுகவினர் தினகரனின் படங்களைப் பார்த்து உற்சாகமாகியிருக்கிறார்கள்.

“அறிக்கைகள் வழியாக மட்டுமே எங்களை சந்திக்கும் தினகரன், வீடியோ வடிவில் அவ்வப்போது உரையாடினால் இன்னும் மகிழ்ச்சியாக இருப்போம்” என்று கோரிக்கை வைக்கிறார்கள் அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்!

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *