மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கிட்டத்தட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவரான ஸ்டாலின் காணொளி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். முதல்வர் என்ற முறையில் அதிக கூட்டம் கூட்டப்படும் சூழலுக்கு தான் காரணி ஆகிவிடக்கூடாது என்பதற்காக காணொளியில் பிரச்சாரம் செய்வதாக அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.
அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்திற்கு எப்போது வருவார் என்ற கேள்வி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அதற்கும் கீழே உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு தினத்தை ஒட்டி ராயப்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினார் தினகரன்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் நல்ல வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். அவர்களுக்கு மக்கள் ஆதரவு தருமாறு உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன். பண மூட்டைகளோடு வருபவர்களிடம் விலை போகாமல் இருந்து நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். எங்கள் வேட்பாளர்கள் எல்லாருமே நல்லவர்கள் தான்’ என்று தெரிவித்தார். அப்போதே அமமுக நிர்வாகிகள், ‘தேர்தல் பிரச்சார பயணத்தை எல்லாம் முடித்துவிட்டு வந்து பிரஸ்மீட் கொடுப்பது போல சொல்கிறாரே?’ என்று குழம்பினார்கள்
இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுதும் அனைத்து இடங்களிலும் அமமுக போட்டியிடவில்லை என்றாலும் 60 சதம் முதல் 70% இடங்கள் வரை போட்டியிடுகிறது.
இதிலும் கணிசமான வேட்பாளர்கள் மாவட்ட செயலாளர்களால் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்கள். அதனால் மாவட்ட செயலாளர்களிடம் அவர்கள் செலவுக்கு பணம் எதிர்பார்த்தார்கள். மாசெக்களோ தேர்தல் செலவுக்கு தலைமை பணம் கொடுக்குமா என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் தன்னிடம் பணம் கேட்காதீர்கள் என்பதைத்தான் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இதனால் மாவட்ட செயலாளர்கள் ஆங்காங்கே செலவு செய்து வருகின்றனர். தேர்தல் செலவுக்குதான் பணம் கொடுக்கவில்லை, பொதுச்செயலாளர் தினகரன் நேரில் வந்து பிரச்சாரம் செய்தால் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும் என்று கருதி மண்டல செயலாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள், ‘சார் எப்ப பிரச்சாரத்துக்கு வர்றாரு?’ என கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்வியை மண்டலச் செயலாளர்களில் சிலர் தினகரனிடம் கேட்க முயன்று உதவியாளர் ஜனாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி வரை அவர்களுக்கு எந்த பதிலும் இல்லை.
தினகரனின் முகமே எங்கள் ஓட்டு என்று கடந்த தேர்தல்களில் பேசிவந்த அமமுக நிர்வாகிகள், தினகரன் தற்போது பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மண்டல செயலாளர்களோ மாவட்ட செயலாளர்களின் ஏற்பாட்டுச் செலவுகளையும் யோசித்து, எல்லா மாவட்டத்திற்கும் வரவில்லை என்றாலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஓர் அரங்க கூட்டமாவது வரலாமே என்று தகவல் அனுப்பி உள்ளார்கள். இன்று காலை வரை தினகரனின் பிரச்சாரத் திட்டம் பற்றி எந்த தகவலும் மண்டலச் செயலாளர்களுக்கு பரிமாறப்படவில்லை.
தினகரனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதில் விருப்பம் தான். ஆனால் சில விஷயங்களில் சசிகலாவின் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் தினகரன் அதன் காரணமாக பிரச்சாரத்துக்கு வர தயங்குவதுபோல் தெரிகிறது.அப்படியென்றால் குக்கரை தொண்டர்களே தூக்கி சுமக்கட்டும் என விட்டு விட்டாரா என்ற விவாதங்கள் அமமுக தொண்டர்களிடம் எழுந்துள்ளன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ்அப்.