தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது என்று புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கும் விவகாரம் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமிக்ரான் பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், நாளை இரவு மக்கள் கோயில்களுக்கு செல்லலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் இருதுறையின் வெவ்வேறு அறிவிப்புகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை இரவு வெளியே செல்ல வேண்டுமா? செல்லக் கூடாதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை (டிசம்பர் 31) இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டிஜிபி தடை விதிக்கிறார். அதே நாளில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என அறநிலைத்துறை அமைச்சர் சொல்கிறார்.
இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர். நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவர். தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது?
குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை” என்று விமர்சித்துள்ளார்.
**-வினிதா**
�,