தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதுகுறித்து இன்று(ஏப்ரல் 22) காலையில் நடந்த விசாரணையில், ஆக்சிஜன் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாகவும், அதனால் தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளதா, அதனுடைய இருப்பு விவரம் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று பதிலளிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக மீண்டும் மதியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூடியது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ தமிழகத்தில் மருத்துவ பதற்ற நிலை இல்லை. தமிழகத்தில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜனும், புதுச்சேரியில் 150 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மருத்துவ தேவைகளுக்காக நாளொன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு 65 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பியதால் மாநிலத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் உள்ள 9600 வென்டிலேட்டர்களில் 5887 வென்டிலேட்டர்களும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள 6000 வென்டிலேட்டர்களில் 3000 வென்டிலேட்டர்கள் மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், உள்ளிட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவசர காலங்களில் துரிதமாக செயல்பட்டு முடிவெடுக்க அதிகாரம் மிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
**வினிதா**
.�,