சபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப், மெலனியா இருவரும் நூல் நூற்கும் ராட்டையை சுற்றினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவுடன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தார். பிரதமர் நரேந்திர மோடி கட்டித் தழுவி அவரை வரவேற்றார். குஜராத்தின் பாரம்பரிய நடன நிகழ்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அதிபரின் பிரத்யேகக் காரில் புறப்பட்டு சபர்மதி சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற ட்ரம்பை கதர் சால்வை அணிவித்து வரவேற்றார் மோடி. மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப், மனைவி மெலனியாவுடன் சேர்ந்து ஆசிரமத்தில் உள்ள நூல் நுற்கும் ராட்டையையும் சுற்றினார். அவர்களுக்கு ராட்டையில் நூல் நூற்கும் முறை பற்றி ஆசிரம நிர்வாகிகள் விளக்கினர். பின்னர் ட்ரம்ப், மெலனியா இருவரையும் அழைத்துச் சென்று ஆசிரமத்தை சுற்றிக் காட்டினார் மோடி. அங்குள்ள 3 குரங்கு பொம்மைகளைக் காட்டி அவை உணர்த்தும் கருத்து குறித்து விளக்கினார்.
பின்னர் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதில், “எனது சிறந்த நண்பர் பிரதமர் மோடிக்கு … நன்றி, அற்புதமான வருகை” என்று குறிப்பிட்டுள்ளார். பில் கிளிண்டனுக்குப் பிறகு சபர்மதி ஆசிரமம் வருகை தரும் 2ஆவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு முடிந்த பிறகு மொரோடோ மைதானத்திற்கு கிளம்பிச் சென்றார் ட்ரம்ப். அங்கு வணக்கம் ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சற்று நேரத்தில் உரையாற்றுகிறார்.
�,”