மாநாடு என்றால் திமுகவை மிஞ்ச ஆளில்லை என்பது தமிழகத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள்கூட ஒப்புக்கொள்ளும் நிஜம்.
பந்தல் சிவா போன்றவர்களுக்கு அப்படி ஒரு பெயர் ஏற்படவே திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாநாடுகள்தான் காரணம். அந்த அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளோடு மாநாடுகள் நடக்கும்.
மாநாடு என்று தொடங்கி சில தேதிகள் குறிக்கப்பட்டு, பின் மாபெரும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் திருச்சியில் மார்ச் 7ஆம் தேதி திமுக நடத்தியிருப்பதும் ஒரு மாநாடுதான். ‘மாநாடு’ என்ற பெயரை சில காரணங்களுக்காக திமுக தலைமை தவிர்த்தாலும் இது மாநாடுதான்.
மாநாடு அல்லது இதுபோன்ற சிறப்புப் பொதுக்கூட்டங்கள் அதுவும் தேர்தல் காலத்தில் நிகழ்த்தப்படும்போது கட்சித் தொண்டர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கும் உறவைக் கட்டியெழுப்புவதாக இருக்கும்.
கூட்டணியில் சீட் குறைச்சல், மன உளைச்சல் என்றெல்லாம் கட்சிகளுக்கு இடையே புகைச்சல் வந்தாலும்… இதுபோன்ற மாநாடுகளில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசும்போது அதைப் பார்க்கும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கு இடையே ஓர் இணக்கம் இயல்பாகவே உண்டாகும்.
சில பல கோடிகள் செலவழித்து நடத்தப்பட்ட இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் அழைக்கப்படாதது திமுகவின் இதுவரையிலான பாதையில் இருந்து சற்று விலகிச் செல்லும் நடைமுறைதான்.
அதுமட்டுமல்ல… தேர்தல் காலத்தில் நடைபெறுகின்ற இதுபோன்ற (மாநாட்டுப்) பொதுக்கூட்டங்களில் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசும் பாய்ச்சல் பேச்சுகள், வீடு சென்ற பின்னரும் தொண்டனின் இதயத்தில் துடித்துக்கொண்டே இருக்கும். அதை அடுத்த நாளோ, அன்றோ அக்கம்பக்கத்தினரிடம் சொல்வார்கள். தேர்தல் பணிகளுக்கான அறிவுரைகளில் சில புதிய அணுகுமுறைகள் அவர்களுக்குக் கிடைக்கும்.
ஆனால் மார்ச் 7ஆம் தேதி நடந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்களைப் பேச அழைத்திருந்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் இன்றைய பிரச்சினைகளைப் பேசினாலும் அது வகுப்பெடுப்பதுபோல்தான் இருந்தது. அந்தப் பிரச்சினைகளின் ஊடான அரசியல்படுத்துதல் என்பது அவர்கள் உரையில் குறைவாக அல்லது விட்டுப்போயிருந்தது என்பதுதான் உண்மை. விடிந்தால் மார்ச் 8 பெண்கள் தினம் எனும்போது இந்த மெகா பொதுக்கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கேனும் பேச வாய்ப்பு கொடுக்கப்படவில்லையே என்ற ஏக்கம், மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் முகத்திலும் எதிரொலித்தது.
திருச்சியையே ஜொலிக்கவைக்கும் இந்த மாநாட்டில் நாம் ஏற்கனவே குறிப்பிடப்படி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் மேற்கொண்ட உத்திகளின் அடுத்தகட்டமாக வந்திருந்த தொண்டர்கள், மக்கள் அத்தனை பேரையும் ஸ்டாலினே அருகே சென்று சந்தித்தார். அதற்காகவே அரங்கத்தில் ஸ்டாலின் செல்வதற்காக ராஜ பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் யாரும் ஏற வேண்டாம் என்று டி.கே.எஸ்.இளங்கோவன்கூட அடிக்கடி எச்சரித்துக்கொண்டே இருந்தார்.
ஸ்டாலின் அந்த பாதையிலே வாண வேடிக்கைகளோடு, ‘ ஸ்டாலின் தான் வாராரு…’ என்ற பாடல் பின்னணியோடு வந்ததைப் பார்த்தால் சினிமாக்களில் ரஜினி என்ட்ரி போலவே இருக்கிறது என்று காட்சி ஒப்புமைப்படுத்தினார் மாநாட்டில் இருந்த ஒரு நண்பர்.
ஒரு தொண்டரில்லை, முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி கிளைச் செயலாளர் வரை பல தொண்டர்களிடம் பேசினோம்.
“திமுகவின் மாநாடு அல்ல இது. ஐபேக்கின் ஈவன்ட் மேனேஜ்மென்ட். தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளின் மெகா ஃபெனாலே நடக்குமே அதுபோல இருக்கிறது. தொண்டனைத் தட்டியெழுப்பும் பேச்சு இல்லை. கட்டிப்போடும் பேச்சு இல்லை. ஸ்டாலினை முன்னிறுத்தும் ஒரு மெகா டெக்னிகல் மேளாவாகத்தான் இது இருக்கிறது. கலை நிகழ்ச்சிகளில் ஆடிய முகங்களில் கூட தென்னிந்திய சாயல் இல்லை. இதுவும் ஐபேக் உபயமாகத்தான் இருக்கிறது. மாபெரும் பொதுக்கூட்டத்தின் பல இடங்களில் ஐபேக்கின் ஊழியர்களும், அதிகாரிகளும் இந்தியில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்” என்று இம்மாநாட்டின் இண்டு இடுக்குகளில் நடந்தவற்றைக் கண்டுபிடித்து நம்மிடம் சொன்னார்கள்.
திமுகவின் இந்த மாபெரும் மாநாடு கே.என்.நேருவின் கடும் உழைப்பில் உருவாக்கப்பட்டது. அவரது உழைப்பு பாராட்டத்தக்கது. அதேநேரம், ஷங்கர் பட பாடலைப் போல ஒரு விஷுவல் டேஸ்டாக வந்து போயிருக்கிறது. அதனால்தான் மாநாடு என்ற பெயரை கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள் போல. திருச்சி என்றால் திருப்புமுனைதான். ஆனால் திமுக எந்தப் பக்கம் திரும்புகிறது?
**-வேந்தன்**
�,”