Fதமிழகம் வரும் மத்திய குழு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள 6 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகம் வர உள்ளதாக திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ள நிவாரண தொகை தொடர்பாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இன்று காலை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

அப்போது அமித்ஷாவிடம் டி.ஆர்.பாலு வழங்கிய கோரிக்கை மனுவில், “அக்டோபர் 25 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை சராசரியாக வடகிழக்கு பருவமழை 92.3 சதவிகிதம் பெய்யும். ஆனால் இந்தாண்டு 144.6 சதவிகிதம் பெய்துள்ளது. கூடுதலாக 52.3 சதவிகித மழை பெய்துள்ளது.

அதுபோன்று நவம்பர் 8 முதல் 14ஆம் தேதி வரை வழக்கமாக 45.1 சதவிகித அளவுக்குத் தான் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 49.6 சதவிகித மழை பெய்துள்ளது.

இதன் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. குமரி மாவட்டத்தில் நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெய்த கன முதல் மிக கனமழை காரணமாகக் குளித்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறு தாலுகாவை சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் படுகாயமடைந்தனர். 6,871 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 807 குடிசைகள் முழுமையாகவும் 8,846 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

அதுபோன்று 2,809 வீடுகள் சேதமடைந்துள்ளன. 49,230.55 ஹெக்டர் பயிர்களும், 526.41ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. எனவே வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தமிழகத்தைச் சீரமைக்க உடனடியாக 550 கோடி ரூபாய் விடுவிக்கவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமித்ஷா உடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, “12 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொன்னேன். உடனடியாக 6 பேர் கொண்ட குழுவை அனுப்புவதாக தெரிவித்தார்.

அதுபோன்று அமித் ஷா முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசினார்.

வெள்ள பாதிப்பைச் சீர் செய்ய மொத்தமாக 2,629 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இதில் உடனடியாக 550 கோடி ரூபாய் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து வரும் மத்தியக் குழு 4 நாட்களில் ஆய்வு செய்து அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் நிவாரண தொகையை ஒன்றிய அரசு விடுவிக்கும்” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share