தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பல நடவடிக்கைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ அவசரத் தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோ, கால் டாக்ஸிகளை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது இரண்டு மாதங்களாக வருமானமே இல்லாமல் துன்பத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ஆட்டோக்கள் இயக்கத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (மே 22) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொற்றின் தன்மையை கருத்தில்கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுனர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் 23.05.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதிக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதியில்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுனர்கள் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதியில்லை” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் சானிட்டைசர்களை ஓட்டுனர்கள் வைத்திருக்க வேண்டும், ஓட்டுனர்களும், பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவை மூன்று முறை கிருமிநாசினி கொண்டு ஆட்டோவை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
**எழில்**�,