டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப் பணியில் மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற முந்தைய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை 12 வாரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுகுறித்து ஜனவரியில் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என எங்களுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. கொரோனா, மழை வெள்ள பாதிப்பு என தமிழகத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகள் சுழற்சியாக வந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் பணி நியமன தேர்வு தொடர்பான வேலைகளை எப்படிச் செய்ய முடியும். இந்த விவகாரத்தில் காலதாமதம் ஆனதற்கு எங்களுடைய மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கான ஆரம்ப பணிகளைக் கூடச் செய்யாமல் இருக்கின்றனர். இவர்கள் செய்த தவறால் பல அரசு ஊழியர்கள் பாதித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு ஒரு மாதமாவது சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை நீதிமன்றம் ஏற்கிறது. அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நீதிமன்றத்திற்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதனை உடனடியாக நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் அரசு அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளில் மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு நீதிமன்றத்தை அணுகிய மனுதாரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
**-பிரியா**
�,