தி.நகர் சத்யாவுக்கு எதிரான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா, தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தி நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சத்யா என்கிற சத்யநாராயணன். இவர் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்ததில் முறைகேடு செய்ததாக, ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்சன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

அதில், தி நகர் எம்எல்ஏவாக இருந்த சத்யா, மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ஆம் காலகட்டத்தில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததில், முறைகேடு செய்ததாகவும், 2017-18 ஆம் ஆண்டு தொகுதி நிதியில் சட்டத்திற்குப் புறம்பாக, 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகளை மட்டுமே மேற்கொண்டார் என்றும் 2018-19 ஆம் ஆண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டிடம் கட்டாமல் 30 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகக் கணக்குக் காட்டி முறைகேடு செய்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த முறைகேடு தொடர்பாக திநகர் சத்யா , மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தற்போது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், வரும் ஜூன் 27ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share