டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் தமிழக அரசு அதன் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள் அருகில் புதிதாக டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தினால் டாஸ்மாக் கடை திறப்பதை தற்காலிகமாக கைவிடப்பட்டு, மீண்டும் கடை திறக்கப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நடக்கிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கக்கூடிய வகையிலேயே அதன் சட்டவிதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்திருக்கிறது. அதாவது மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை முழுமையாக பரிசீலித்து அதன் அடிப்படையிலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்து தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த சட்டத்திருத்தத்தின்படி, குறிப்பிட்ட ஓர் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது. மக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியளித்தால் 30 நாள்களுக்குள் மாவட்ட ஆட்சியர் முடிவை எதிர்த்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டதிருத்த விதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது தடுக்கப்படும்.
**-வினிதா**