ரூ. 9,627 கோடி கடன்: தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி!

politics

தமிழகம் கடன் மூலம் கூடுதல் நிதியை திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. அதில், தமிழகத்திற்கு மட்டும் ரூ .11,269 கோடி வர வேண்டியுள்ளது.

கொரோனா காலமான தற்போது தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால், அதற்கான நிதி தங்களிடம் இல்லை எனக் கைவிரித்த மத்திய அரசு, வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என இரண்டு வாய்ப்புகளை அறிவித்தது.

இதனிடையே மாநிலங்களுக்கான இழப்பீடுகளை அளிப்பது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த இழப்பீட்டுத் தொகையை, மாநிலங்கள் கடனாக பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன.

இந்த நிலையில் மத்திய நிதித் துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 14) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திறந்த சந்தை கடன் மூலம் கூடுதலாக ரூ .9,627 கோடியை திரட்ட தமிழகத்திற்கு மத்திய நிதித்துறை, செலவுத் துறை ஆகியவை இன்று அனுமதி வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் எழும் பற்றாக்குறையை ஈடுகட்ட விருப்பம் -1 ஐ ஏற்றுக்கொள்வதை தமிழக அரசு முறையாக தெரிவித்த பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக திறந்த சந்தை கடன் மூலம் கூடுதலாக ரூ .68,825 கோடியை திரட்ட 20 மாநிலங்களுக்கு செலவுத் துறை நேற்று அனுமதி வழங்கியது. இன்று தமிழகத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டதால், 21 மாநிலங்களுக்கு இதுவரை ரூ .78,542 கோடியைத் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *