�
தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் 20 நடமாடும் தேநீர் கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடித்தால் மட்டுமே அந்த நாள் புத்துணர்வுடன் தொடங்கும். அந்த அளவுக்கு டீ பலரின் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. உலக அளவில், தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக அருந்தப்படுவது தேநீர். இந்த தேநீர் கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் தேயிலை உற்பத்தியாளர்களின் உழைப்பை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ‘சர்வதேச தேயிலை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் , சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 நடமாடும் தேநீர் கடை வாகனங்களை கொடியசைத்து திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இண்ட்கோ எனும் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 10 இடங்களிலும், திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா 3 இடங்களிலும், கோவையில் 4 இடங்களிலும் நடமாடும் தேநீர் கடைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் ரூ.10க்கு தேநீர் கிடைக்கும். மக்களுக்கு தரமான, கலப்படமற்ற தேநீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**-வினிதா**
�,