`நீங்களுமா வாசன்? -நெருப்புக் கடிதம்!

Published On:

| By Balaji

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே.வாசன் பெரும்பாலும் மலினமான அரசியல் சர்ச்சைகளில் அடிபடாதவர். எக்காரணம் முன்னிட்டும் நிதானம் நழுவி நெருப்புச் சொற்கள் பேசாதவர். பக்குவமான தலைவர் என்ற இமேஜுக்கு சொந்தக்காரர்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நலனை விட வேறு சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். .

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த ஆறு தொகுதிகளுமே தமாகா கேட்ட தொகுதிகள் இல்லை என்பது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வால்பாறை சட்டமன்றத் தொகுதி கிடைக்காததாலும், வேறு சில காரணங்களாலும் தமாகாவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார் துணைத் தலைவராக இருந்த கோவை தங்கம்.

இந்நிலையில்தான் கோவை தங்கத்தின் ஆதரவாளர்களான கோவை மாநகர் மாவட்ட தமாகா வை சேர்ந்த நிர்வாகிகள் இந்தக் கடிதத்தை மூப்பனாரின் விசுவாசிகளுக்கு வணக்கம் என்று குறிப்பிட்டுத் தொடங்கியிருக்கிறார்கள்.

“தேர்தலுக்கு 2 மாதம் முன்பே ஜி.கே.வாசன், யுவராஜ், சேலம் ராஜேஷ்வரன் ஆகியோர் முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்துப் பேசிவிட்டு ஆறு தொகுதிகள் என்றும், அந்த ஆறு தொகுதிகள் எவை என்றும் பேசி முடித்துவிட்டார். ஆனால் இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கோவை தங்கம், முன்னாள் எம்பி வெங்கடேசன் ஆகியோரை தொகுதி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி,’எத்தனை தொகுதிகள் என்று மட்டும் பேசுங்கள், மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் வாசன்.

கட்சிக்காக கோவை தங்கம் அமைச்சர் வேலுமணியிடம் வாதாடியபோது, ‘உங்க கட்சிக்கு 6 தொகுதிகள் தருகிறோம். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் நில்லுங்கள். நீங்கள்(கோவை தங்கம்) ஸ்டேட் லீடர். அதனால் வால்பாறையைக் கேட்காதீர்கள். திருவிக நகர், அல்லது ஸ்ரீபெரும்புதூரில் நில்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

மூப்பனாரின் மகன் என்பதால் நாங்கள் வாசனை நேசித்தோம், மரியாதை செலுத்தினோம். ஆனால் நீங்கள் யாருக்காக அந்த ஆறு தொகுதிகளை முடிவு செய்தீர்கள்.

உங்களுக்கு வேண்டப்பட்ட யுவராஜுக்காக ஈரோடு கிழக்கு, உங்களது உறவினர் தர்மராஜுக்காக லால்குடி, தமாகாவுக்கு நெருக்கடியான நேரத்தில் வாசனின் கொடும்பாவியை எரித்த குமாராதாஸின் மகன் ஜூடோவுக்கு கிள்ளியூர், நான்காவது முறையாக பட்டுக்கோட்டை ரங்கராஜ், தூத்துக்குடி விஜயசீலனுக்கு எப்படி கிடைத்தது என்பது சுரேஷ் மூப்பனாருக்கே வெளிச்சம்.

10 ஆண்டு காலம் நிழல் மாதிரி இருந்த கோவை தங்கத்தைப் புறக்கணித்துவிட்டு பட்டியலை ஏற்கனவே துணை முதல்வர், முதல்வரிடம் கொடுத்துவிட்டு… போய் எண்ணிக்கையை மட்டும் பேசி வாருங்கள் என்று சொல்லி அனுப்ப… அங்கே அதிமுகவினரே உங்கள் தலைவர் கொடுத்த பட்டியல் என்று காட்டியபோதுதான் உண்மை தெரிந்தது. பட்டியலைக் கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தீர்களே… அது உங்களால் (வாசன்) மட்டும்தான் முடியும்”என்று போகும் அந்தக் கடிதம் முடியும்போது….

“மனசாட்சியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் நண்பர்களே சகோதரர்களே உங்கள் முடிவுதான் என்ன? இனிமேலாவது சிந்தித்து செயல்படுங்கள். இல்லையென்றால் தேர்தலுக்கு முன் கடைசி நாள் விடியல் சேகர் கண்ணீர் விட்டு கதறி அழுத நிலைதான் உங்களுக்கும் வரும்”என்று கூறி முடித்திருக்கிறார்கள்.

தமாகா தலைமை நிலைய நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்துப் பேசியபோது, “கோவை தங்கம் திமுகவுக்கு போய்விட்டார். அதனால் அவரது ஆதரவாளர்களின் கருத்தை பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்று இந்த விவகாரத்தில் கூற முடியாது. அவர்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான். நாங்கள் வாசனை மூப்பனாரை போல நம்பியிருந்தோம். ஆனால் கடந்த தேர்தல் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கியிருக்கிறது. பல இரண்டாம்கட்டத் தலைவர்கள் வெளியேறி வருகிறார்கள். இது வாசனுக்கும் தெரியும்” என்கிறார்கள்.

நாம் இந்தக் கடிதம் பற்றி வாசனின் கருத்தறிய முயன்றபோது முடியவில்லை. அவரது பதில் அதிகாரபூர்வமாக கிடைத்தால் அதையும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share