சசிகலா தொண்டர்களோடும், தான் சிறையில் இருந்தபோது கடிதம் எழுதிய நிர்வாகிகளோடும் போனில் பேசிவரும் ஆடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், மே 31ஆம் தேதி இதுகுறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி. “சசிகலாவின் அழைப்புக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்கமாட்டார். அவராகவே அமமுக தொண்டர்களிடம் பேசி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால், அவரும் அவரது குடும்பமும் அதிமுகவில் இருந்து விலகியிருக்க வேண்டும்”என்று கூறியிருந்தார்,
சசிகலாவின் ஆடியோ உரையாடல்களுக்கான அதிமுகவின் பதிலாகவே இது ஊடகங்களில் வெளியிடப்பட்டாலும், ‘இந்த பேட்டி கொடுப்பதற்கு முன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்திடம் கே.பி.முனுசாமி அனுமதி பெற்றாரா?”என்ற கேள்வி அதிமுகவிலேயே எழுந்தது.
இதற்கு நாம் விடை தேடியபோது, சசிகலாவின் அலைபேசி உரையாடல்களை அடுத்து எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கே.பி.முனுசாமி அந்த பேட்டியை அளித்திருக்கிறார் என்றும், இது தொடர்பாக அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசவில்லை என்றும் சேலம், தேனி வட்டார அதிமுகவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸின் ஆதரவாளர்கள் சமூக தளங்களில் கடுமையாக விமரித்து வருகிறார்கள்.
“அண்ணே முனுசாமி…. சசிகலாவின் எண்ணம் நிறைவேறுதோ இல்லையோ ஆனால் எடப்பாடியும் நீங்களும் போடும் திட்டம் நிறைவேறாது. முனுசாமி அண்ணனுக்கும் எடப்பாடிக்கும் நாங்கள் கேட்கும் ஒரே கேள்வி. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 25 நாட்கள் ஆகின்றது. நீங்கள் துணை ஒருங்கிணைப்பாளராக அண்ணன் எடப்பாடி சட்டசபை எதிர்க்காட்சி தலைவராக இருந்துகொண்டு என்ன செய்தீர்கள்? கேள்வி கேட்கும் பொறுப்பில் இருந்துகொண்டு ஸ்டாலினிடம் தமிழக மக்களுக்காக ஒரு கோரிக்கை வைத்தீர்களா? உங்கள் கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றினாரா? எதுவும் இல்லை ஏனென்றால் உங்களுக்கு அதற்கு நேரம் இல்லை.
உங்களின் நேரத்தை எல்லாம் கட்சியை எப்படி கைப்பற்றுவது, . சசிகலாவின் அடுத்த நடவடிக்கை என்ன. அதை எப்படி முறியடிப்பது, கழக ஒருங்கிணைப்பாளரை எப்படி ஏமாற்றுவது? மூத்த நிர்வாகிகளை எப்படி விலைக்கு வாங்குவது என்பதுபற்றி யோசிக்கதான் உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். தயவுசெய்து குறுக்கு வழியில் சென்றால் அந்த இலக்கை அடைய முடியாது. முட்டு சந்தில் முட்டி திசை தெரியாமல் திக்கு முக்காடும் நேரம் வந்துவிட்டது”என்று எடப்பாடியையும் கேபி முனுசாமியையும் #AiadmkcheifOPS என்ற ஹேஷ்டாக்கை போட்டு கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்.
இதுகுறித்து நாம் ஓபிஎஸ்-க்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.
“2017 ஆம் ஆண்டு அப்போதைய சூழலில் சசிகலா குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். அப்போது ஏற்கனவே சசிகலாவை பிடிக்காதவர் என்ற காரணத்துக்காக மட்டுமே ஓபிஎஸ்சோடு சேர்ந்தார் கே.பி.முனுசாமி. ஓபிஎஸ்சின் அணியில் முக்கியமானவராக இருந்தார். ஓபிஎஸ்சுக்கு தான் தான் எல்லாமே என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். ஒருகட்டத்தில் எடப்பாடியும் சசிகலாவை எதிர்க்கும் நிலை ஏற்பட்ட போது….ஓபிஎஸ்சை வலியுறுத்தி எடப்பாடியோடு சேர்க்க வைத்ததில் கே.பி.முனுசாமிக்கு பெரும்பங்குண்டு.
அணிகள் இணைந்த பிறகு கே.பி. முனுசாமியின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. மெல்ல மெல்ல எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். ஓபிஎஸ் அணி என்பது முக்கியமானவர்கள் நிறைந்ததாக இருந்தது. விழுப்புரம் லட்சுமணன், மைத்ரேயன் போன்ற பல முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்சை விட்டு விலகிச் சென்றதில் கே.பி.முனுசாமிக்கு பெரும் பங்குண்டு. சென்னை சுற்றுப்புறம், வட மாவட்டங்களில் ஓபிஎஸ்சுக்கு தர்மயுத்த காலத்தில் இருந்த பெரும் பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததும் முனுசாமியால்தான் என்று ஓபிஎஸ் கருதுகிறார்.
பன்னீர், எடப்பாடி இருவருக்கும் பிரச்சினை என்று வரும்போது சமாதான தூதராக செயல்பட்டு வந்த முனுசாமி, பெரும்பாலும் இப்பிரச்சினைகளில் எடப்பாடிக்கு சாதகமாகவே முடிவெடுக்க துணை நின்றார். அப்படித்தான் முதல்வர் வேட்பாளர் பிரச்சினையிலும் கடைசியில் எடப்பாடிக்கே ஆதரவாக நின்றார் கேபி முனுசாமி. கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே கே.பி.முனுசாமியுடனான தொடர்பை பெருமளவு ஓபிஎஸ் குறைத்துக்கொண்டார்.
இந்தநிலையில்தான் சசிகலா என்ற எதிர்ப்பு என்ற கொள்கையில் எடப்பாடியும், கே.பி.முனுசாமியும் இணைந்தனர். கட்சி நலனுக்காக அமமுகவை சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஓபிஎஸ்சின் வியூகத்தை அவர்கள் புறக்கணித்தனர். சசிகலாவை ஓபிஎஸ் ஆதரித்தால் அவரையும் எதிர்ப்பது என்பதுதான் கேபி முனுசாமியின் திட்டம். எனவேதான் சசிகலா விவகாரத்தில் பன்னீரை கலந்து ஆலோசிக்காமலேயே அதிரடியாக பேட்டியை அளித்துள்ளார். ஓபிஎஸ்சை எதிர்ப்பதற்கு ஒருபக்கம் என்றால்… வடமாவட்டங்களில் சி.வி. சண்முகத்துக்கு டஃப் கொடுப்பதற்காக கே.பி. முனுசாமியை பயன்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் ஆட்டோமேட்டிக்காக சி.வி. சண்முகம் கடந்த மாத இறுதியில் ஓ.பன்னீரை தேனிக்கே சென்று சந்தித்துவிட்டு வந்தார். கே.பி. முனுசாமியை மையமாக வைத்து இவ்வளவு அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து இப்போது ஓபிஎஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்” என்கிறார்கள்.
நாம் கேபி. முனுசாமி தரப்பில் பேசினோம். “முனுசாமி தெளிவாக இருக்கிறார். அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பது அவரது கொள்கை. ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்தே இதைத்தான் அவர் வெளிப்படையாக கூறி வருகிறார். இப்போதும் அதைத்தான் சொல்கிறார். அதன் அடிப்படையில் அவர் எடப்பாடிக்கு நண்பராகிவிட்டார், ஓபிஎஸ்சுக்கு எதிரியாகிவிட்டார் என்று சொல்வதெல்லாம் அவரவர் இஷ்டம். அவர் தனது கொள்கையில் தெளிவாகவே இருக்கிறார்”என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,