lதடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை… பிரதமர்

Published On:

| By Balaji

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் ரூ.3,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டத்துக்குப் பிரதமர் நேற்று (ஜூலை 23) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைக் குறைக்கிறது. தலைநகர் இம்பால் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள 25 சிறு நகரங்கள் மற்றும் 1,700 கிராமங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையும்.

நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர், “கொரோனா வைரஸுக்கு எதிராக நாடு அயராது போராடிவரும் வேளையில், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஆகிய இரட்டை சவால்களை எதிர்த்துப் போராடி வருகின்றன.

கொரோனா வைரஸ் நெருக்கடியில்கூட நாடு செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இன்றைய திட்டம் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. தடுப்பூசி வரும் வரை, கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். அதே நேரம் வளர்ச்சித் திட்டப் பணிகளும் முழு சக்தியுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கும் நோக்குடன், கடந்த ஆண்டு ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், மக்களின் பங்களிப்புடன் தற்போது நாட்டில் தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக, கடந்த ஆறு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் மற்றும் கலாச்சார வலிமைக்கு உதாரணமாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ்கின்றன. வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர், “வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் தற்போது, வன்முறையைக் கைவிட்டு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைத்துள்ளனர். போராட்டங்கள் என்பது மணிப்பூரில் வரலாற்றின் ஒரு பகுதியாகிவிட்டது” என்றும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை போர் தொடரும் என்று பிரதமர் தெரிவித்துள்ளது, அதுவரை ஊரடங்கு நீடிக்குமா என்ற கேள்வியையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share