விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் ஏற்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக இன்று (நவம்பர் 19) பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிரதமரின் அறிவிப்பில் என்ன அதிரடி இருக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் இன்ப அதிர்ச்சியாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக சொல்லி போராடிய விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விதைகள் மற்றும் நுண்ணீர் பாசனம், 22 கோடி மண் சுகாதார அட்டைகள் போன்ற வசதிகளை வழங்க நாங்கள் உழைத்தோம். இத்தகைய காரணிகள் விவசாய உற்பத்தியை அதிகரிக்க பங்களித்துள்ளன. இருப்பினும், புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளைப் பற்றி விவசாயிகளுக்குப் புரியவைக்க நாங்கள் தவறிவிட்டோம். எனவே, அவற்றைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் மோடி.
2020 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் போராட்டங்கள் நடத்தினார்கள். நவம்பர் 2020 முதல் டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டு மூன்று சட்டங்களான விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020, மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 ஆகியவற்றை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்தன.
ஒன்றிய அரசு சட்டத்தில் திருத்தம் செய்யலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனபோதும் விவசாயிகள், ‘சட்டங்களை வாபஸ் வாங்குவதே முடிவு என்று கூறிவிட்டனர். உச்ச நீதிமன்றம் தலையிட்டு கடந்த ஜனவரி மாதம் மூன்று சட்டங்களுக்கு இடைக் காலத் தடை விதித்திருந்தது.
போராட்டங்கள் தொடர்ந்து வந்த நிலையில், உத்திரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், இமாசல பிரதேஷ், கோவா உள்ளிட்ட முக்கிய சட்டமன்றத் தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டு வர இருக்கும் நிலையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளார்.காங்கிரஸ் கட்சி இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, “விவசாயிகள் வென்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
**வேந்தன்**
�,”