ஆயிரம் எம்பிக்கள்: எச்சரிக்கும் பீட்டர், கார்த்தி

Published On:

| By Balaji

சென்ட்ரல் விஸ்டா என்று பெயரிடப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த நாடாளுமன்ற வளாகம் கட்டும் பணி எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மணிஷ் திவாரி, “ மத்திய விஸ்டா திட்டத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டி அதில் மக்களவையின் வலிமையை ஆயிரம் எம்பி.க்களாக அதிகரிக்கப் போவதாக எனக்கு பாஜக தரப்பினரிடம் இருந்து நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன. அது உண்மையென்றால் அதுகுறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் சிவகங்கை காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், “ நம்மைப் போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேவை. ஆனால் அதிகரிப்பு மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டால், அது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைக்கும், அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது. இதுகுறித்து பொது விவாதம் தேவை”என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2019 ல் மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை தற்போதைய 543 ல் இருந்து 1,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 1977 ஆம் ஆண்டில், மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது. இன்று அது 130 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த்து கருத்து வெளியிட்டுள்ள தமிழக சிறுபான்மை ஆணைய தலைவரும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ்,

“மக்களவை இடங்களை 1000 ஆக உயர்த்தினால் தென்மாநிலங்களுக்கு பேரிழப்பு !சீன பாராளுமன்றத்தைபோல பிரதமர் பேசி உறுப்பினர்கள் கேட்கும் பொதுக்கூட்ட அரங்கமாக மாறி ’விவாதமண்டபம்’ என்ற ஜனநாயக உயிர்துடிப்பை இழக்கும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு முயற்சியை நிறுத்தவேண்டும்”என்று கூறியுள்ளார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel