கன்னுக்குட்டியாப் பொறந்தாலும் ராஜா வீட்டுல பொறக்கணும் என்பது பழமொழி. வாக்காளரா இருந்தாலும் வேலுமணி தொகுதியில வாக்காளரா இருக்கணும் என்பது புதுமொழி. தமிழகத்தில் மட்டுமில்லை; இந்தியாவிலேயே இப்படியோர் அதிர்ஷ்டமுள்ள ஒரு தொகுதி இருக்குமா என்பது சந்தேகம்தான்.
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூரில் அப்படியென்ன வேலைதான் நடந்திருக்கிறது என்று கேட்கிறீர்களா… அதையெல்லாம் ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாது. ஒரு தொடர் எழுத வேண்டும் அல்லது ஒரு புத்தகம் போட வேண்டும். அந்தளவுக்கு அந்தத் தொகுதியின் கிராமங்களிலும், நகரப்பகுதிகளிலும் திகட்டத் திகட்ட வேலைகள் நடந்திருக்கின்றன. நடந்துகொண்டும் இருக்கின்றன. இனியும் நடக்குமென்று ஆளும்கட்சியினர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள், அடுத்தும் அவர் அமைச்சராகத் தொடரப் போகிறார் என்ற நம்பிக்கையில்.
பத்துத் தொகுதிகளுக்கான நிதியும் ஒத்தத் தொகுதிக்குத் திருப்பப்பட்டால் அப்படித்தான் வேலை நடக்கும் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். அதில் உண்மையும் இருந்தாலும் அது ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தொகுதியில் நடந்திருப்பதைப் போல, இந்தியாவிலேயே வேறெந்தத் தொகுதியிலும் நடந்திருக்குமா என்று ஆய்வு செய்தால், நிச்சயமாக தொண்டாமுத்தூர் தொகுதியை எந்தத் தொகுதியாலும் அடித்துக்கொள்ள முடியாது. ஓர் உதாரணம்… தொகுதிக்குள் இருக்கும் கோவை நகரின் ‘காஸ்ட்லி ஏரியா’வான ஆர்.எஸ்.புரத்தில் வெறும் 1.8 கி.மீ, தூரமுள்ள திவான் பகதூர் ரோடு, மாதிரிச்சாலையாக மாற்றப்படுகிறது. எவ்வளவு தொகை தெரியுமா… வெறும் 25 கோடி ரூபாய்தான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசின் உதவியில் நடக்கிறது இந்தப்பணி.
அதே ஆர்.எஸ்.புரம் பகுதியில் காந்தி பார்க் என்ற மாநகராட்சி பூங்கா, பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு இப்போது பூட்டப்பட்டுக்கிடக்கிறது. சற்று தள்ளி மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படுகிறது. தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், அதையொட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள நொய்யல் குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 400 கோடி ரூபாய் அளவுக்கு மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. இவற்றைத் தவிர்த்து, புதிய குடிநீர்த் திட்டங்கள், ரோடுகள் மேம்பாடு, எல்இடி தெரு விளக்குகள், பூங்காக்கள் மேம்பாடு என்று தொகுதிக்குள் இருக்கும் நகரப்பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு எங்காவது வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பிஎஸ்யுபி திட்டத்திலும், அனைவருக்கும் வீடு கட்டும் பிரதம மந்திரி திட்டத்திலும் பல ஆயிரம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நகரப் பகுதியில்தான் இப்படி இருக்கும் என்று பார்த்தால், கிராமப் பகுதிகளில் கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்தே விட்டன. நீர் மராமத்துத் திட்டம், குளங்கள், வாய்க்கால் புனரமைப்பு என கிராமங்களுக்குரிய அத்தியாவசியப் பணிகளுடன் நகரப் பகுதிகளை மிஞ்சும் வகையில் சின்னச்சின்ன கிராமங்களுக்கும், தூரம் தூரமாய் இருக்கிற தோட்டங்களுக்கும் தார்ச்சாலைகள் பளிச்சிடுகின்றன. ஆள் நடமாட்டமே இல்லாத பாதைகளிலும் எல்இடி விளக்குகள் மின்னுகின்றன. பேரூர் குளக்கரை மூடப்பட்டு அமர்க்களமாக சாலை போடப்பட்டுள்ளது.
பொது மக்களுக்குப் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் ரிசர்வ் சைட்களில் மேல்நிலை நீர்த்தொட்டிகள், சமுதாயக்கூடங்கள் என புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டம் என அங்கே நடக்காத திட்டங்கள் என்று எதையுமே சுட்டிக்காட்டவே முடியாத அளவுக்கு வேலைகள் நடக்கின்றன. தொகுதிக்குள் ஒரு புதிய அரசுக் கல்லூரியையும் கொண்டு வந்துவிட்டார் அமைச்சர் வேலுமணி. இதெல்லாம் வெளியில் தெரியும் வேலைகள். அரசின் நலத்திட்ட உதவிகள் என்று பார்த்தால் இந்தத் தொகுதியில் தரப்பட்டுள்ள அளவுக்கு வேறெங்குமே நலத்திட்ட உதவிகளை யாரும் தந்திருக்க முடியாது, இனியும் தரமுடியாது என்கிற அளவுக்கு உதவிகள் வாரிவழங்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புப் பகுதிகளாக இருந்தாலும் அங்கேயும் வீடு கட்ட அரசு நிதியுதவி கிடைக்கும். அங்கேயும் தெருக்குழாய்களில் தண்ணீர் கொட்டுகிறது. இதெல்லாம் அரசு நிதியில் நடப்பவை.
அமைச்சரின் தனிப்பட்ட உதவி என்று பார்த்தால், தொகுதிக்குள் இருக்கும் குடும்பங்களில் ஏதாவது ஒரு விதத்தில் அவரிடம் உதவி பெறாத குடும்பங்களின் எண்ணிக்கை, மிகமிகக் குறைவாகவே இருக்கும். பள்ளி, கல்லுாரியில் சீட்டு, படிப்பதற்கு கல்வி உதவி, படித்தவர்களுக்கு வேலை, வீரர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள், மருத்துவ சிகிச்சைக்கு உதவி என்று எந்தக் கோரிக்கையுடன் போனாலும் அவர்களுக்கு அந்த உதவி கட்டாயம் கிடைத்துவிடுகிறது. அந்த விஷயத்தில் கட்சி பேதம் எதையும் அவர் பார்ப்பதாகத் தெரியவே இல்லை. அதுமட்டுமில்லாமல், கல்யாணம், காதுகுத்து, சடங்கு என்று யார் பத்திரிகை கொடுத்தாலும், அமைச்சர் போகிறாரோ இல்லையோ, அங்கே ‘போக வேண்டியது’ போய் விடுகிறது. பத்திரிகை கொடுப்பவரின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, அந்தத் தொகையும், தொகையுடன் செல்லும் பொருட்களும் இருக்கும். இதையெல்லாம் தாண்டி, அவர் கோவைக்குச் செல்லும் நாள்களில் அதாவது வாரத்தின் இறுதி நாள்களில் குறைந்தபட்சம் 100, 150 வீடுகளுக்காவது அவர் விசிட் அடித்து விடுகிறார். சாவு, சடங்கு எல்லாவற்றையும் விசாரித்து விடுகிறார்.
இவ்வளவு செய்வதெல்லாம் போதாதென்று, ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசு என்று தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுப்பொருட்களை அனுப்பி திக்குமுக்காட வைக்கிறார். வரும் 24ஆம் தேதியன்று ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பேரூர் செட்டிபாளையம் என்னும் ஊரில் வருகிற 15ஆம் தேதியன்று 73 ஏழை இணைகளுக்கு இலவச திருமணம் மற்றும் சீர் வழங்கும் விழா, பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கு வீடு வீடாக அழைப்பிதழ் தரப்படுகிறது. இந்த அழைப்பிதழுடன் ஒரு வேஷ்டி, சட்டை, ஒரு சேலை, ஒரு எவர்சில்வர் தட்டு, ஒரு ஹாட் பேக் என 1,000 ரூபாய்க்கும் மேலான பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதேபோல கடந்த 2019ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு இந்த ஆண்டு இரட்டிப்பாகியிருக்கிறது. கடந்த ஆண்டில் கொரோனா காலத்தில் ஏழை, பணக்காரர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருடைய வீடுகளுக்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என அடுத்தடுத்து பொருட்களைக் கொண்டு வந்து குவித்திருக்கிறார்கள் எஸ்பிவி டீம் என்ற பெயரில் இயங்கிவரும் அமைச்சரின் ஆட்கள். இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இன்னும் எத்தனை எத்தனை பரிசுகள், பண முடிப்புகள் வருமென்று தெரியவில்லை என்று கூச்சம் ஏதுமின்றி கொண்டாடித் தீர்க்கிறார்கள் தொண்டாமுத்தூர் வாக்காளர்கள்.
இவற்றை விநியோகம் செய்யும் பணி, கட்சி நிர்வாகிகளிடமும், தீவிரமான தொண்டர்களிடமும் ஒப்படைக்கப்படுவதோடு, அவர்களுக்கான கவனிப்பும் வெகுசிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படி வாரி வாரி வழங்குவது, அங்குள்ள பெரும்பான்மையான மக்களிடம் பேசுபொருளாக மாறியிருக்கிறது என்றாலும், ‘எல்லாம் நம்ம பணம்தானே’ என்று படித்த பலரையும் பேசவும் வைப்பதை மறுப்பதற்கில்லை. இதேபோன்று 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னும் வீடுவீடாக பரிசுப்பொருட்களை அனுப்பியும் தொண்டாமுத்தூர் தொகுதியில், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் எஸ்பி வேலுமணி வாங்கிய வாக்குகளை விட அந்தத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மகேந்திரனுக்கு 23,000 வாக்குகள் குறைவாகவே கிடைத்தன. அந்த நேரத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பெரிதாக வெடித்ததும் அதற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது. இருப்பினும் அந்தத் தோல்விக்குப் பின்னும் அமைச்சர் வேலுமணியின் கவனிப்பு குறையவே இல்லை.
தொண்டர்களையும், மக்களையும் இப்படி மகிழ்ச்சி வெள்ளத்தில் முத்துக்குளிக்க வைக்கும் அமைச்சர் வேலுமணி, வரும் தேர்தலில் சூலுார் தொகுதிக்கு மாறப்போகிறார் என்று சொல்வதை யாராலும் நம்பவே முடியவில்லை. வேலுமணி முதன்முறையாக வென்ற பேரூர் தொகுதி, இப்போது இல்லவே இல்லை. அடுத்து பிரிக்கப்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் இரண்டு முறை நின்று இரண்டு முறையும் அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அவர் அரசியலில் உச்சம் தொட்டது இந்த பத்தாண்டுகளில்தான். தன்னை இவ்வளவு உயரத்துக்குத் தூக்கி விட்ட தொண்டாமுத்தூர் தொகுதியை விட்டு அவர் தொகுதி மாறுவதற்கு எந்த முகாந்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் அப்படி மாறினால் இந்தத் தேர்தலில் எல்லாமே மாறப்போகிறது என்றுதான் அர்த்தம்!
**–பாலசிங்கம்**�,