Eதொல்குடி வேளிர் வேந்தர் – 2

politics

பறையன்: ஒரு சாதி பிரிவைக் குறிப்பதாக கருதுவது தவறு!

**முனைவர் அர.பூங்குன்றன்**

**கேள்வி: ‘தொல்குடி வேளிர் வேந்தர்’ நூல் தொல்குடி மேய்ச்சல் சமூகத்தின் வாழ்வியல் இயல்பையும் அந்நிலத்தின் அரசியல் பொருளாதாரப் பின்னணியும் விவரிக்கிறது. நடுகல் கல்வெட்டுகள் பின்புலத்தில் அவ்வாறான ஆய்வு அதற்கு முன்பு வெளிவரவில்லை. இந்த ஆய்வின் கருத்தாக்கம் எப்படி ஏற்பட்டது?**

பதில்: முதலில் எங்கேயோ தொடங்கி இதில் வந்து முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். லோகாயுதா / உலகாயுதம் என்ற நூல். அதில் வேதகால கால்நடை சமூகம் குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கும். வேதகால கால்நடை சமூகத்தின் இயல்பு, சொற்கள் உருப்பெற்றது, இயல்பான சொற்களின் வேர் சொல்லை அறிதல் எல்லாம் அந்த நூலின் வழியே கற்றேன். அந்த அடிப்படையை இங்குள்ள நடுகல் சமூகத்தின் மீது பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற முனைப்பும் இந்த ஆய்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஆனால், அதை முழுமையாக செய்து முடித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அந்தச் சமூகத்தின் அமைப்பு வேறு; இங்கிருந்த சமூகத்தின் அமைப்பு வேறு. சொற்களின் அமைப்பும் பொருளும் முற்றிலும் மாறுபட்டது. ஓர் உதாரணம் சொல்கிறேன். வேதத்தில் பாகா என்ற சொல் உண்டு. அதன் பொருள் பங்கு/பாகம். அந்தச் சமூகத்தில் கிடைக்கும் எந்தவொரு பொருளையும் சமமாக பங்கீடு செய்வது வழக்கம். அந்தப் பங்கை பெறுபவன் பக்தன். அந்தப் பாகத்தை பகிர்ந்து கொடுப்பவனுக்கு பகவான்/தலைவன் என்று பெயர். பக்தனுக்கும் பகவானுக்கும் இடையே உள்ள உறவுக்கு பெயர் பக்தி. தமிழ்நாட்டில் பாலாசிரியர் என்ற பெயர் நடுகல் கல்வெட்டுகளில் மூன்று இடங்களில் வருகிறது. முதலில் பாலாசிரியரின் மூன்று மகன்கள் என்று கருதி உடன் பிறந்த மூவரின் நடுகல் என்றனர். மூன்று கல்வெட்டுகளின் கால இடைவெளி அளவு அறுபது ஆண்டுகள். பாலாசிரியர் அந்தப் பகுதி தலைவரின் பெயர். சோழர் காலத்தில் அந்தப் பகுதி சிறுபாழ் நாடு என்று வழங்கப்பட்டது. முதலில் பாலாசிரியர் பெயருக்கு இளம் மக்களுக்கு கல்வி வழங்கும் தலைவர் என்ற பொருள் கொண்டனர். சங்க இலக்கியங்களில் புலவர்கள் பெயர் பாலாசிரியர் என்று வருகிறது. இளம் பாலாசிரியர் என்றும் வருகிறது. இதை எப்படிப் பொருள் கொள்வது? ஆக இங்கு பாலாசிரியர் என்பதற்கு பகிர்ந்து கொடுக்கும் பொறுப்பில் உள்ள தலைவர் என்ற பொருளை நான் கொண்டேன். அது எழுபது சதவிகிதம் சரியாக இருக்கும். அதுபோல இன்னும் பல சொற்கள் உள்ளன. அந்தந்தப் பகுதி சமூகத்தோடு ஒப்பீடு செய்தால் மட்டுமே சரியான பொருள் அறிய முடியும். கர்நாடக தமிழக நடுகற்களை ஒப்பீடு செய்ய வேண்டுமென்று பேராசிரியர் சுப்பராயலு அடிக்கடி சொல்லுவார். அதைச் செய்திருந்தால் இன்னும் அதிக புரிதல் கிடைத்திருக்கும். வருத்தமான செய்தி அதை நான் செய்யவில்லை என்பது.

**கேள்வி: நடுகல் கல்வெட்டுகளில் வரும் சில சொற்கள் நேரடியாக சாதி பெயராக கருதும் போக்கு… கல்வெட்டுகளில் வரும் வேளான், பள்ளி, பறை ஆகிய சொற்களை எப்படி கையாள வேண்டும்?**

பதில்: இன்றைக்கு இருக்கும் சாதி பெயருக்கும் நடுகல்லில் வரும் குடி பெயருக்கும் முழுமையான தொடர்பு கிடையாது. ஒரேயொரு இடத்தில் புதுப்பள்ளிகள் என்ற பெயர் வருகிறது. இன்றைக்கு இருக்கிற வன்னியரில் ஒரு பிரிவு. அதன் பிறகு சோழர்கால கல்வெட்டுகளில் நிறைய தலைவர்கள் வருகிறார்கள். பின்னர் சம்புவராயர் முந்நூற்று பள்ளி என குறித்து கொள்கிறார்கள். காடவன் கோப்பெருஞ்சிங்கன் கூட பள்ளி குலத்தில் இருந்து வந்தவன் என்று சொல்லிக்கொள்வான். இதெல்லாம் பழங்குடியில் இருந்த ஒருநிலை. மற்றபடி இங்கு பனையமாரியர், செறுவாரியர் என்ற பெயர்ச் சொற்கள் வருகின்றன. அதனை வேதகால ஆரியர் என்று சொல்ல முடியாது. இங்கு உள்ளூரில் தமிழ் பேசும் பழங்குடி மரபு என்றே கருத முடியும். கள்வர் என்று ஒரு சொல் வருகிறது. அதைத் திருடன் என்று பொருள் கொள்கின்றனர். வேறோரிடத்தில் அருங்கள்வர் என்று வருகிறது. அருமையான கள்வர் எனக் கொள்ள முடியுமா?. இல்லை. அந்த இடத்தில் கள்வர் என்பது ஒரு குடி.

வேளான் என்பது தலைவன். அது எந்த சாதியையும் குறிப்பது அல்ல. வேளாண்மை செய்பவர்களைக் குறிக்கும்போது வெள்ளாள என்றுதான் கல்வெட்டுகளில் வருகிறது. ஞானசம்பந்தர் பதிகத்தில் அதைப் பார்க்கலாம். பின்னர் பிற்கால கல்வெட்டுகளில் நிறைய இடங்களில் வருகின்றன. சாதாரணமாக கால்நடைகள் வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் காலத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளில் வருவது குடிப்பெயர்கள். அது சாதியாக மாறும் காலத்தில் நடுகல் பண்பாடு வீழ்ந்து விட்டது. குடிப் பெயருக்கும் இன்றைய சாதி பெயருக்கும் ஒரு சதவிகிதம் தொடர்பு வேண்டுமானால் இருக்கலாம்.

**கேள்வி: சாக்கை பறையனார், அருங்கள்வர், புதுபள்ளிகள், மன்றாடி போன்ற குடி சொற்கள் பிற்காலத்தில் வரும் சாதி பெயர்களோடு தொடர்புபடுத்த முடியுமா?.**

பதில்: அதற்கான வாய்ப்பு குறைவு. அன்றைய சூழலும் வாழ்வியலும் வேறு. பிற்கால சோழர் காலத்தில் குறிக்கப்படும் வாழ்வியல் சூழல் வேறு. அதிலிருந்து வந்த சமூகமாக இருக்கலாம். ஆனால், அதன் இயல்பில் இருந்து மாறுபட்டு விட்டது. பள்ளி என்ற சொல் ‘காவும் பள்ளியும்’ என்று மலைபடுகடாத்தில் பயின்று வருகிறது. அது பாதுகாப்புக்கு வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் அரண்மிக்க மந்தைகளைக் குறிக்கும் விதத்தில் வந்துள்ளது. இடப்பெயரின் அடிப்படையில் குடிப்பெயர் அங்கு உருவானது. நடுகல் கல்வெட்டுகளில் முறைப்படி தொண்டை மண்டலத்தில்தான் இந்தச் சொல் வந்திருக்க வேண்டும். ஆனால், தர்மபுரி பகுதியில் வருகிறது. அதைப் போலவே கள்வர் என்ற சொல் மிகுதியாக இங்குதான் கிடைக்கிறது. இவை பண்டைய குடிகளின் இடப்பெயர்வை குறிப்பன. குடிப்பெயருக்கும் இப்போதைய சாதிக்கும் தொடர்பு சிறியளவில் மட்டுமே. அவை பலவாக கிளைத்துப் போய்விட்டன. இடத்துக்கு ஏற்ப சோழர் காலத்தில்தான் அந்தந்தப் பகுதிகளில் நிலைப்பெற்றது.

**கேள்வி: நடுகல் கல்வெட்டுகளில் பருமன், அரைசர், மக்கள், மருமக்கள் சேவகன்/மகன்… இவர்களுக்கு அன்று உள்ளூர் மக்களோடு இருந்த தொடர்பு என்ன?**

பதில்: உள்ளூர் மக்களுக்கு கல்வெட்டில் சொல்லப்படுகின்ற ‘மக்கள்’ என்பவருடன் தான் நேரடி தொடர்பு. காலங்காலமாக இவர்களின் கீழ்தான் குடிகள் வாழ்ந்தனர். அந்த குடிகளில் ஒருவன்தான் சேவகன் என்பவன். சில நேரங்களில் சேவகனுக்கு மகன் / சிற்றப்பன் போன்றோரும் வருவர். இவர்கள்தான் கால்நடை போரில் நேரடியாக பங்கு பெற்றனர். நடுகல்லும் அவர்களுக்கே எடுக்கப்பட்டது. மக்கள் என்பது மகன் என்பதன் பன்மை. மகன் என்பவனே தலைவன். ஆட்பெயருக்கு அடுத்தபடியாக மகன் வந்தால் அது ரத்த உறவைக் குறிப்பது. பொதுவாக மக்கள் என வரும்போது அது குடி தலைவனைக் குறிப்பதாகும். ஆக மக்கள் / மருமக்கள், சேவகன், மகன் இவர்களுக்குத்தான் குடிகளோடு நெருக்கமான தொடர்பு. பருமன், அரைசர் பெயரளவிலான தலைவர்கள் மட்டுமே.

**கேள்வி: நடுகல் பண்பாட்டில் வணிகத்துக்கான பொருளாதாரப் பின்புலம் இருந்தது. இது வரலாற்றுக் காலத்தில். ஆனால், நடுகல் பண்பாட்டை விதந்து பேசும் சங்க இலக்கியங்களில் நேரடியாக மாட்டு வணிகம் பற்றிய குறிப்புகள் வரவில்லையே… இந்த வேறுபாட்டை எப்படி பார்ப்பது?.**

பதில்: “மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டு” என்றொரு புறநானூறு பாடல் வரி ஞாபகம் வருகிறது.‌ மருத நிலத்து உழவர்கள், முல்லை நிலத்திலிருந்து மாடுகளை ஓட்டிச்செல்வதாகப் பொருள். அப்போது மாடு விற்பனை நடைபெற்றதா என்ற கேள்வியும் வருகிறது. ஆனால், மாடுகள் விற்கப்பட்டதாக நேரடி சான்றுகள் இல்லை. இவை பெரும்பாலும் மாடுபிடி சண்டையில் கவரப்பட்டவையாக இருக்கலாம். பிற்கால கல்வெட்டு ஒன்று. முதலாம் இராசராசனின் காலத்தில் அவனுக்கு அடங்கிய சிற்றரசன் ஒருவன் தான் வெற்றிகொண்ட பகுதிகளில் இருந்து 900 ஆடுகளை கவர்ந்து வந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஐஞ்சந்தி துர்க்கா படாராகிய கோயிலுக்கு தானமாக கொடுத்ததைப் பதிவு செய்கிறது. இந்தக் கல்வெட்டுதான் நேரடியாகச் சொல்கிறது. தொடக்கக் காலத்தில் தானமாக கொடுக்கப்பட்ட ஆடு மாடுகள் இதுபோல் வெற்றி கொண்ட பகுதியிலிருந்து கவர்ந்து வரப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்குண்டு. பல்லவர் காலத்தில் வணிகர்கள் வந்தார்கள். ஆடு மாடு வணிகம் நடந்தது. அதற்கு முன்பு கவரப்பட்ட கால்நடைகள் தானம் கொடுப்பதற்கும், மருத நிலத்தின் பயன்பாட்டுக்கு விற்பதற்கான பண்டமாகவும் இருந்ததென சொல்ல முடியுமே தவிர, உறுதியான சான்றுகள் இல்லை. சில இடங்களில் குறிப்பாக கொங்கு பகுதியில் கால்நடைகளை ‘பண்டம்’ சொல் வழக்கில் அழைக்கும் வழக்கம் இன்றுமுள்ளது. மரியாதைக்குரிய வழக்கு சொல்லாக பண்டம் என்ற பதம் பயன்பாட்டில் இருந்தாலும் உண்மையில் அவை வணிகப்பொருள் என்பதுதான்.

**கேள்வி: மாட்டுப் பொருளாதாரம் மேய்ச்சல் சமூகத்தில் பண்பாட்டு ரீதியாக ஆற்றிய பங்கு என்ன?**

பதில்: வாணியம்பாடி பக்கத்தில் உள்ள கேதாண்டபட்டி ஊரில் நடுகல் இருக்குமிடத்துக்கு, மாட்டுப் பொங்கல் அன்று அல்லது மறுநாள் ஏலகிரி மலைமீது உள்ள மக்கள் தங்களின் கால்நடைகளை ஓட்டி வந்து சடங்குகள் செய்வர். அவ்வாறு செய்வதால் வரக்கூடிய வருடத்தில் கால்நடைகள் நோய்வாய்ப்படாமல் பட்டி பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை. மாட்டுப் பொங்கல் என்பதே கால்நடை சமூகத்தின் பொருளாதாரப் பின்னணியை மையப்படுத்திய திருவிழா தான். தொண்டை மண்டலத்தில் எருதாட்டம், மாடு விடும் விழாக்கள் பொங்கல் நாட்களில் நடப்பவை. குறிப்பாக நடுகற்கள் இருக்கும் மந்தை வெளி / மண்டு பகுதியில் உள்ள மைதானத்தில் இவ்விழா நடைபெறும். பொங்கல் நாட்களில் மற்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் குறைவு. மாட்டுத் திருவிழா அன்றுதான் பெரும்பான்மையான மக்கள் கூடுவர். கரடிகை போன்ற சில இடங்களில் நடுகல் கல்வெட்டை சுற்றியே மாடுகள் நிறுத்தப்படும். இது வளமை சடங்கின் வெளிப்பாடு. கொங்கு பகுதியில் அதனை பட்டிப் பொங்கல் என்பர். அங்கு ஒவ்வொருவரின் வீட்டிலும் தனித்தனியாக பட்டிப் பொங்கல் வெகு சிறப்பாக சிறிய விழா போலவே நடைபெறும். வேளாண்மையோடு பெரிதும் தொடர்பில்லாத அங்கு தான் மாடுகளைச் சேற்றில் நடக்கவிடும் முறையும் பின்பற்றப்படுகிறது. தொண்டை மண்டலத்தில் மண்டில் கூடும் விழா தனித்த மேய்ச்சல் சமூக பண்பாட்டின் எச்சம். கால்நடை பொருளாதாரத்தை சார்ந்து இயங்கும் கிராமங்களில் மற்ற பண்டிகைக்கு வருகிறார்களோ, இல்லையோ மாட்டோடு தொடர்புடைய விழாக்களில் தவறாமல் கூடும் வழக்கத்தை இன்றளவும் தமிழகம் கொண்டுள்ளது.

**கேள்வி: கொங்கு நாட்டு கல்வெட்டுகளில் குறிப்பாக இடிகரை திருமுருகன்பூண்டி கல்வெட்டுகளில் வரும் ‘வெள்ளாழன் பறையன்’ என்ற சொற்பதத்தை எவ்வாறு பொருள் கொள்வது?**

பதில்: பறையன் என்ற சொல் முல்லை நிலத்தின் குடியைக் குறிப்பது. புறநானூற்றில் கடம்பன், துடியன், பாணன், பறையன் நான்கு குடிகள் அன்றி வேறு குடிகள் இல்லை என்பதாக வரும். கொங்கு நாடும் முல்லை திணை பண்புகள் கொண்ட நிலம். அதனால் பறையன் என்ற சொல் அந்த முல்லைத் திணைக்குரிய தொல்குடி என்றுதான் பொருள் கொள்ள முடியும். இப்போது வழக்கில் இருக்கும் ஒரு சாதி பிரிவைக் குறிப்பதாக கருதுவது தவறாகும்.

**கேள்வி: திரு.நாகசாமி அவர்கள் வெள்ளாளரில் ஓர் உட்பிரிவு பறையர் என்ற பொருண்மையில் கட்டுரை எழுதியுள்ளார். அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. உங்கள் கருத்து…**

இந்தக் கேள்விக்கான பதில் நாளை காலை 7 மணி பதிப்பில்…

நேர்காணல் செய்தவர்: குமரவேல் இராமசாமி (யாக்கை தன்னார்வ அமைப்பு)

**[தொல்குடி வேளிர் வேந்தர் – 1](https://www.minnambalam.com/politics/2021/10/26/6/Tholkudi-Velhir%20-politics)**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *