இதுவல்லவே கிறித்துவம் !

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

அதிகாலைப் பனித்துளியாய் – தூரத்து மணியொலியாய் மனம் கவ்வும் மென்மை சுமந்த அணுகுமுறையால் – கண்ணியமான மொழியினால் மொத்த இந்தியத்தையும் தன்னகத்தே கவர்ந்த அருளாளர் அன்னை தெரேஸா !

அவரை நோக்கி எத்தனையோ விமர்சன அம்புகள் பாய்ந்ததுண்டு. ஆனால், எப்போதுமே அவர் தன்னிலை இழந்ததில்லை ! தன் பொறுமையால் , அன்பால், அரவணைப்பால் கிறித்துவத்துக்கு மேலும் மேலும் பெருமை சேர்த்தபடிதான் வாழ்ந்து மறைந்தார்.

அதனால்தான், இந்தியர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு ‘புனிதர்’ பட்டம் கொடுத்து வாழ்த்தி மகிழ்ந்தது வாடிகன் !

வாடிகனில் இருந்தபடி உலகின் முப்பது சதவிகித மக்களை ஆளும் கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் ஆண்டவருக்கு ஓர் வழக்கமுண்டு. அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் முதலில் அந்த மண்ணை முத்தமிடுவார் ! அதன்பின்பே மக்களை சந்திப்பார்.

இந்திய வருகையின் போதும் போப் ஆண்டவர் இந்தப் புண்ணிய மண்ணை வணங்கி மண்டியிட்டு முத்தமிட்டார்.

அப்படி, போப் ஆண்டவரால் முத்தமிடப்பட்ட நமது புனித மண்ணைத்தான் ‘இது, சொறியும் சிரங்கும் பிடித்த மண். அதனால்தான் நான் ‘ஷூ’ போட்டுக் கொள்கிறேன்…’ என்கிறார் பனவிளை பங்குத் தந்தை பொன்னையா. என்னத்த சொல்ல ?

போப் ஆண்டவரைவிட தன்னை மேலானவராக கருதிக் கொள்ளும் இந்த நிலைக்குப் பெயர் மனப் பிறழ்ச்சி அல்லாமல் வேறென்ன ?

அணிந்திருந்த வெள்ளை அங்கிக்கு சற்றும் பொருத்தமில்லாத அலப்பறைகளோடு அருமனை மேடையில் மருளாட்டம் காட்டி பிடி சாபம் என ஓய்ந்தமர்ந்த அந்த பொன்னையா போதகரைக் கண்டபோது ஆச்சரியமும் அசூயையும்தான் மேலிட்டது.

ஆன்மீகத்துக்கும் இவருக்கும் ஆறுகாத தூரம் இருக்க எந்த நம்பிக்கையில் இவரை போதகராக ஏற்றுக் கொண்டது அந்த சமூகம் ?

பாரதமாதா – பிரதமர் மோடி – உள்துறை அமைச்சர் அமீத்ஷா – தனித்து ஆளும் திமுக – மாண்புமிகு எம்.எல்.ஏக்கள் என சகலரையும் விட்டுக் கடாசும் இவரது கலவர மனநிலை குறித்து சந்தேகம் எழுகிறது.

பரந்த கிறித்துவத்தை பங்கு வைத்துப் பேசுவதால் இவரை அநாமதேயம் என ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை…

“திமுகவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் அதன் தலைமைக்கு கிடைத்தவைகள் அல்ல. அது, எங்கள் ஆயர்கள் போட்ட பிச்சை…’ என்கிறார். அகம்பாவம் என்பது ஊணெங்கும் ஊறியிருந்தால் மட்டும்தான் இப்படி பேச முடியும்.

“பாரதமாதாவின் அழுக்கு, மேல் பட்டுவிடக் கூடாது என்றுதான் ஷூ போடுகிறேன்…”என்கிறார். பரதேச களங்கத்தால் ஆழக் கழுவப்பட்ட மூளை ஒன்றில்தான் இப்படியானதோர் சிந்தனை உதிக்கக் கூடும்.

“மோடியும் – அமீத்ஷாவும் புழுத்துச் சாவார்கள். அவர்களை நாய் திங்கும் எனச் சாபமிடுகிறேன்…’ என்கிறார். வன்மம் என்பது ஆணிவேர்வரை பாய்ந்து அதன் தலையில் தற்குறி முத்திரை குத்தப்பட்டிருந்தால்தான் இப்படியெல்லாம் கொக்கரிக்க முடியும்.

நான் லண்டன் இங்கிலீஷ் பேசக் கூடியவனாக்கும் என அலட்டி நிற்கும் அவரது வாயில் இருந்து வெளிப்பட்ட எந்த சொல்லும் நல்ல சொல்லாக இல்லையே ? உண்மைக் கிறித்துவம் இதுவல்லவே !

வல்லமை கொண்டவர்களையே இப்படி எடுத்தெறிந்து வாயாடும் இவர் தன்னிடம் சிக்கும் சாதாரண மக்களை என்ன பாடுபடுத்துவார் ? இவர் கீழ் இருக்கும் கன்னியாஸ்த்ரீகள் உள்ளிட்ட ஊழியர்களை எவ்வளவு கீழ்த்தரமாக பேசி நடத்துவார் என்பதை எண்ணும்போது மனம் கனத்துப் போகின்றது.

வாழ்க்கையின் பாரம் தாங்க முடியாத சமயங்களில் ஆறுதல் தேடித்தான் திருச்சபைகளை நாடுகிறார்கள் எளியவர்கள். அந்த நேரம், இவ்வாறான சுடு சொற்கள் சுமந்தவர்கள் போதகர்களாக வாய்த்துவிட்டால் கொண்ட பாரம் பெருகி கோரமாகிவிடாதா ?

மதப்பிளவுகளை அதனுள்ளோடிய சாதியப் பிளவுகளை எல்லாம் கொஞ்சமும் கூச்சமின்றி ஏதோ பைபிள் வசனம் போல சொல்லிப் போவது குறித்து அவர் வெட்கியாக வேண்டும்.

ஆளும் கட்சிகளை – அதன் தலைவர்களை நாகரீகமற்ற சொற்களால் வசைபாடுவதால் அவருக்கு என்ன லாபம் ? கிறிஸ்துவத்துக்கு எதிரான மனப்பான்மை மட்டுமே அதன் பலனாகத் திரும்பும். பொன்னையாக்கள் போன்ற ஆபாசப் பேச்சாளர்களை இன்னமும் சுமந்து கொண்டிருப்பது அந்த சமூகத்துக்குப் பெரும் பாரம்.

கண்ணியத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போன கத்தோலிக்கத் திருச்சபை இதுபோன்ற அநாச்சாரங்களை ஆதரிக்காது, வழி மொழியாது என்றே தோன்றுகிறது !

மொத்தத்தில், ஜார்ஜ் பொன்னையா என்னுமந்த நபர் தான் அணிந்திருந்த அங்கிக்கு ஆனவரை அவமானத்தை தேடிக் கொடுத்து விட்டார். தனது அடிபிடித்த காழ்ப்பின் நெடியை கிறிஸ்துவத்துக்குள் செலுத்தி அதன் மாட்சியை குலைத்து விட்டார்.

சட்டம் தன் கடமையை செய்வதற்கு முன் அவர் முந்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, மனம் வருந்தி தேவனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டபடி ஓய்வு பெற்று விடுவது அவரை ஆளாக்கிவிட்ட கிறித்துவத்துக்கு அவர் செய்யும் கைமாறாக அமையும் ! அப்புறம் அவர் விருப்பம்.

கடவுளே…. கடவுளே… அந்தக் கொல்கத்தா பாதையின் குருதி பதப்பைக் காயவிட மாட்டார்கள் போலிருக்கிறதே !

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.,

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share