kஇதுதான் என் முதல் பணி: சென்னை துணை மேயர்!

politics

சென்னையை கொசு இல்லா நகரமாக மாற்றுவதே என் முதல் பணி என்று சென்னை துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகரில் உள்ள நீர்நிலை கால்வாய் பகுதிகளில் இன்று(மார்ச் 7) துணைமேயர் மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மகேஷ்குமார், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளான எங்களுக்கு, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் உடனே ஈடுபடுங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி சைதாப்பேட்டை அப்பாவு நகரில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இன்று இங்கு வந்து நேரில் ஆய்வு செய்தேன்.

இந்தப் பகுதி மட்டுமில்லை, சென்னை முழுவதும் கொசு இல்லா நகரமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை பண்ணி, இன்று அதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளோம். கொசு ஒழிப்பு பணியில் 3463 பேர் ஈடுபட்டிருக்கின்றனர். கொசு ஒழிப்பிற்காக 67 வாகனங்களில் புகை மருந்து அடிக்கும் பணி நடக்கின்றது. கைகளினால் புகை பரப்பக் கூடிய 251 இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை இயந்திரங்கள் உள்ளன. எதிர்காலத்தில் கொசு இல்லா சென்னையை உருவாக்க, இன்னும் அதிகமான இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்துவோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு நாள்களுக்கு முன்புதான் பதவி ஏற்றோம். சென்னையில் கொசுவை ஒழிப்பதே என் முதல் பணி. இதையடுத்து, அடுத்தடுத்த பணிகள் தொடங்கப்படும். குடிநீர் பிரச்சனை இல்லை. ஒன்றிரண்டு இடங்களில் புகார் வந்தாலும், உடனடியாக சரிசெய்யப்படுகிறது.

சென்னையில் உள்ள கால்வாய்களில் அனுமதியின்றி கழிவுநீரை வெளியேற்றும் வீடுகளுக்கு இறுதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு முறையாகக் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகக் கால்வாய்களில் கழிவுகள் கொட்டும் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரலாறு காணாத மழையினால் சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. முதல்வர் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இதற்காக ஒரு சிறப்பு குழுவை முதல்வர் அமைத்துள்ளார். அந்தக் குழுவின் அறிக்கையின்படி எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, ஆயத்த பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.


அதுபோன்று, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தென்னம்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்ததுடன், தானும் இணைந்து சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு, பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும், மாநகராட்சி முழுவதும் தார்சாலை வசதி மற்றும் குடிநீர் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறினார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *