திருப்பூருக்கு திருப்பி அனுப்பப்படும் பொள்ளாச்சி ஜெயராமன்: ஏன்?

Published On:

| By Balaji

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேலிருக்கிறது. தமிழகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் தேர்தலுக்கான பரபரப்பு இன்னும் அதிகமாகாத நிலையில், பொள்ளாச்சியிலும் அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்திலும் தேர்தல் குறித்த விவாதங்களும் விவகாரங்களும் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டன.

அதற்கு முதல் காரணம், பொள்ளாச்சி பாலியல் வழக்கின் புதிய திருப்பம். பல மாதங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த இந்த வழக்கின் விசாரணை, திடீரென முயல் வேகத்திற்கு மாறி, அதிமுக மாணவரணி நிர்வாகி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விவகாரத்தைப் பெரிதாக்கி பிரசாரத்தில் முன்னெடுத்து அதில் பெரும் வெற்றியும் கண்ட திமுக, இப்போதும் இந்த மூவர் கைது செய்யப்பட்டதை வைத்து அரசியல் சடுகுடு ஆடத்துவங்கிவிட்டது.

இதில் முதலில் அவுட் ஆகியிருப்பவர் பொள்ளாச்சியையே அடைமொழியாகக் கொண்ட ஜெயராமன்தான். இப்போது பொள்ளாச்சி எம்எல்ஏவாக இருக்கும் ஜெயராமன்தான், 2001, 2006 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று பத்தாண்டுகள் அந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர். மீண்டும் போட்டியிட்டிருந்தால் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருப்பார். ஆனால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 2011 சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி ஜெயராமனை உடுமலையில் போட்டியிடவைத்தார். அங்கேயும் அவர் வென்றார். அதன்பின்பு 2016 தேர்தலில் மீண்டும் பொள்ளாச்சியில் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. அதிலும் வென்று தொடர்ச்சியாக நான்காவது முறையாக எம்எல்ஏவாகும் பெருமையைப் பெற்றார்.

வருகிற தேர்தலில் அவர் மீண்டும் பொள்ளாச்சியில்தான் போட்டியிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் இந்த பாலியல் விவகாரம் வெடித்திருக்கிறது. அதில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதோடு, பொள்ளாச்சி ஜெயராமன் மகனின் பெயரும் இழுக்கப்பட்டிருக்கிறது. அதை நிரூபித்தால் ஐம்பதாண்டு கால அரசியலை விட்டு விலகுவதற்குத்தயார் என்று அவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்குச் சவால் விட்டிருக்கிறார். அப்படி நிரூபிக்கமுடியாவிட்டால் கட்சியின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்வாரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது திமுகவினரை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவரைக் குறிவைத்து பரப்புரையை திமுக தலைமை முடுக்கிவிட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை வைத்தே அவருடைய அரசியல் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு, சொந்தக்கட்சியிலேயே சிலர் தீவிரமான முயற்சிகளைச் செய்துவருவதாக அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் குமுறல் வெடித்துள்ளது. அவருக்கு பொள்ளாச்சியில் மீண்டும் வாய்ப்பு வழங்கினால் பாலியல் விவகாரத்தை மையமாக வைத்தே திமுகவினர் பரப்புரை செய்து அவரைத் தோற்கடித்துவிடுவார்கள் என்று கட்சி நிர்வாகிகளே பயப்பட ஆரம்பித்துவிட்டனர். அந்த அச்சம் கட்சித்தலைமைக்கும் வந்திருப்பதாகத் தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்துள்ள சர்வே ரிப்போர்ட்டின்படி, பொள்ளாச்சி ஜெயராமனை பொள்ளாச்சி தொகுதியில் நிறுத்தினால் அங்கு மட்டுமின்றி பக்கத்துத்தொகுதிகளிலும் அதிமுகவுக்கான வெற்றிவாய்ப்புகள் பாதிக்கப்படுமென்று கூறப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.

அதனால் அவரை திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு தலைமையிலிருந்து ஆலோசனை சொல்லப்பட்டிருப்பதாக அதிமுக தலைமைக்கழக வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. பொள்ளாச்சி ஜெயராமனின் செட்டியார் சமுதாய மக்கள் அந்தத் தொகுதியில் அதிகம் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. முதலில் பல்லடம் அல்லது திருப்பூர் வடக்கு என்று இரண்டு வாய்ப்புகள் தரப்பட்டு அதில் வடக்கே இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இந்தத் தகவலைச் சொல்லும் அதிமுக நிர்வாகிகள் கூடுதல் விவரங்களையும் அடுக்குகின்றனர்.

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஏற்கெனவே திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கும் இதுவே காரணமென்றும் விளக்கம் சொல்லப்படுகிறது. அங்கே நிறுத்தப்பட்டால் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பெரியளவில் எடுபடாது என்பதால்தான் முதல்வரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும் வழிகாட்டுதல்குழு உறுப்பினருமான வேலுமணியும் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக கட்சி நிர்வாகிகள் காரணத்தை விளக்குகின்றனர்.

பொள்ளாச்சியில் ஜெயராமனுக்கு வாய்ப்பு தரப்படாதபட்சத்தில், அங்கு பொள்ளாச்சி நகரச் செயலாளருமான தம்பி என்ற கிருஷ்ணகுமார் நிறுத்தப்படும் வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால் கைது செய்யப்பட்ட அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தமும், தம்பியும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகப் பரப்பப்பட்டுள்ளதால் ஜெயராமனுக்கு எதிரான பரப்புரை ஆயுதம் இவரையும் தாக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

ஜெயராமனுக்கு பொள்ளாச்சி என்ற அந்த ஊரின் பெயர்தான் அடைமொழியாகவும் அடையாளமாகவும் இருந்தது. இப்போது அதுவே அவருக்கு தடையாக மாறியிருக்கிறது. ஐம்பதாண்டுகால அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான ஜெயராமன், இந்த விவகாரத்திலிருந்து எப்படி விடுதலையாகப் போகிறார் என்பதைத்தான் கொங்கு மண்டலமே விழிப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

**–பாலசிங்கம்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share