மாவட்டம் மாவட்டமாக திமுகவின் நிலைமை பற்றி ஆய்வு நடத்திவரும் அக்கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு நேற்று (ஆகஸ்டு 19) திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். காலை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவையும், மாலையில் தெற்கு மாவட்ட திமுகவையும் நேரு ஆய்வு செய்தார்.
காலை திருப்பூர் ராஜா ராவ் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டம் கூடியது. முதன்மைச் செயலாளர் நேருவுடன், திமுக கொறடா சக்கரபாணி, மதுரை எம்.எல்.ஏ. மூர்த்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், மாநகர பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோரும் மேடையில் இருந்தனர். மொத்த நிர்வாகிகளில் அளவோடுதான் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
அறிமுக படலங்களுக்குப் பின் பேசிய நேரு, “தலைவர் சொல்லித்தான் நான் இங்கே வந்திருக்கேன். கொங்கு பகுதியில் திமுகவை பலப்படுத்துவதே நமது நோக்கம். அதற்காகத்தான் இந்த ஆய்வுக் கூட்டம். மாவட்டத்தில் கட்சி, வளர்ச்சி பற்றி கருத்து சொல்பவர்கள், பிரச்சினை இருப்பவர்கள் பேசலாம்” என்று கூறினார். ஆனால் ஒருவரும் எழுந்து எதுவும் சொல்லவில்லை. ஆச்சரியப்பட்டபடியே நேரு பார்த்துக் கொண்டிருக்க அப்போது எழுந்த மாநகர் பொறுப்பாளர் நாகராஜ், “அண்ணே…கம்ப்ளைண்ட் சொல்ற அளவு நாங்க நடந்துக்குறதில்லீங்க. எல்லாமே சரியா போயிட்டுருக்குதுங்க” என்று சொல்ல, நேரு முகம் சிவந்தது.
“போன சட்டமன்றத் தேர்தல்ல நாலு தொகுதியில தோத்துருக்கோம். கம்ப்ளைண்ட் இல்லைங்குறீங்க? இந்தா உங்க மேல எத்தனை கம்ப்ளைண்ட் வந்திருக்கு பாரு” என்று ஒரு கத்தை பேப்பரை தூக்கி டேபிளில் போட்டார். அதையெல்லாம் எடுத்துப் படிங்க பார்ப்போம் என்று நேரு சொல்லச் சொல்ல நாகராஜ் ஆடிப் போனார். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மேல அவ்ளோ புகார்கள் வந்திருக்கு. பல பேர் மேல கிரிமினல் கேஸ் வந்து கட்சிக்கே கெட்ட பெயர் ஆகியிருக்கு. நீங்க என்னடான்னா கம்ப்ளைண்ட் இல்லைன்றீங்க. போன சட்டமன்றத் தேர்தல்ல திருப்பூர் தெற்கு தொகுதியில மாவட்டச் செயலாளர் போட்டியிட்டுத் தோக்குறாரு. அங்க நிறைய முஸ்லிம் வாக்குகள் இருக்கு. அவங்களும் நமக்கு ஓட்டுப் போடலை. ஏன் இந்த நிலைமை?” என்று நேரு கேட்க கேட்க மாவட்டச் செயலாளர் செல்வராஜ் பதில் பேசவில்லை.
தொடர்ந்து பேசிய நேரு, “திருப்பூர் மாநகரத்துல 60 வார்டு இருக்குது, ஒரு வார்டுல கூட திமுக நிலைமை சரியில்லை. 40 வார்டுல வெளியூர்லேந்து வந்தவங்களை எல்லாம் பொறுப்பாளரா போட்டிருக்கீங்க. வெளியூர்க்காரனுக்கு உள்ளூர்ல எப்படி அறிமுகம் இருக்கும்? அவன் எப்படி கட்சி வேலை செய்வான்? 20 வார்டுல உள்ளூர் காரனை போட்டிருக்கீங்க. அவங்களும் சரியா செயல்படலை. இப்படி இருந்தா கட்சி எப்படிய்யா வளரும்?” என்று வறுத்தெடுத்த நேரு, “மாவட்டச் செயலாளர் ரூம்ல இருக்கேன். தனியா புகார் கொடுக்குறவங்க என்கிட்ட வந்து புகார் கொடுக்கலாம்” என்று அறிவித்தார்.
அதன்படி மாவட்டச் செயலாளர் செல்வராஜின் அறைக்கு சென்று அமர்ந்தார். அவரோடு செல்வராஜும் சென்று உட்கார்ந்துகொண்டார். அப்போது சில பல நிர்வாகிகள் உள்ளே செல்வதும் வருவதுமாக இருந்தனர். துணிந்த ஒரு நிர்வாகி ஒரு துண்டுச் சீட்டில், ‘முதன்மைச் செயலாளர் அவர்களே… மாவட்டச் செயலாளரை பக்கத்தில் அமரவைத்துக் கொண்டு அவரைப் பற்றி புகார் சொல்லச் சொன்னால் எப்படி சொல்லுவது? அவரை வெளியே இருக்க வைத்துவிட்டு நீங்கள் மட்டும் நிர்வாகிகளை சந்தித்தால் நன்றாக இருக்கும்’ என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். இதைப் படித்த நேரு உடனடியாக மாவட்டச் செயலாளர் செல்வராஜிடம், ‘நீங்க கொஞ்சம் வெளிய இருங்க. நான் நிர்வாகிகளை பாத்துக்குறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகே மளமளவென புகார்கள் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் மீது புகார்களை குவிக்க ஆரம்பித்தனர் நிர்வாகிகள்.
“வங்கி மோசடி செய்தவர்கள், போலி பாஸ்போர்ட் தயாரித்த குற்றவாளிகள், 2018 ஈரோடு மண்டல மாநாட்டுக்கு கட்சி ரசீது புக்கையே போலியாக அச்சடித்தவர்கள் என குற்றவாளிகளுக்கெல்லாம் மாவட்டச் செயலாளர் புகலிடம் அளித்து பாதுகாத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில் திருப்பூர் திமுகவைப் பற்றி தாறுமாறாக செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு பதவியையும் ஏலம் போட்டு விற்கிறார். கட்சி உறுப்பினர் இல்லாதவர்களுக்குக் கூட பதவிகள் கொடுக்கிறார். பல்லடம் ஒன்றிய சேர்மன் திமுகவைச் சேர்ந்தவர், துணை சேர்மன் பாலசுப்ரமணியன் 33 வயது இளைஞர், அவரும் திமுகதான். ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசுப் பணி நியமனத்தில் முறைகேடு நடப்பதாக துணை சேர்மன் கட்சியில் சொல்லிப் பார்க்கிறார். ஆனால் எதுவும் கேட்காததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் துணை சேர்மன். வழக்கு போட்ட பிறகு மாவட்டச் செயலாளர் சேர்மனையும் துணை சேர்மனையும் அழைத்து பஞ்சாயத்து பேசி வழக்கை வாபஸ் வாங்க வைத்துவிட்டார். ஆனால் வழக்கு எதற்காக போட்டாரோ அதை சரி செய்யவில்லை. மாநகரப் பொறுப்பாளர் இப்போது திருப்பூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டியிருக்கிறார். இதுபற்றியும் தலைமை விசாரிக்க வேண்டும்” என்று அடுக்கியிருக்கிறார்கள்.
புகார்களை எல்லாம் படித்து ஏற்கனவே ஐபேக் தனது ஆய்வின் மூலம் அளித்த புகார்களையும் கையில் வைத்துக்கொண்ட நேரு, மாவட்டச் செயலாளர் செல்வராஜிடம் இதுபற்றியெல்லாம் சரமாரியாக விசாரணை நடத்தியிருக்கிறார். ‘உங்க கூட இருக்கிறது யார் யாருனு எனக்கு எல்லாம் தெரியும்” என்றெல்லாம் பாய்ந்திருக்கிறார் நேரு. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
போலி பாஸ்போர்ட் வழக்கில் அண்மையில் கைதான ராஜ மோகன் குமார் திருப்பூர் மாவட்ட திமுக வர்த்தக அணி செயலாளராக இருந்தார். கைது செய்யப்பட்ட பின் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. ஜாமீனில் விடுதலையாகி வந்த பின்னரும் அவர் மாவட்டச் செயலாளர் செல்வராஜோடுதான் இன்று வரை வலம் வந்துகொண்டிருக்கிறார். முதன்மைச் செயலாளர் கே. என். நேருவை திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலத்துக்கு அழைத்துவரச் சென்ற குழுவில் இந்த ராஜமோகனும் இடம்பெற்றிருந்தார். போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதான ராஜமோகனுக்கு மாவட்டச் செயலாளர் இன்று வரை இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்பதுதான் நிர்வாகிகள் பலரின் பேச்சாக இருந்தது. நேருவிடம் நேருக்கு நேராகவே இதை சிலர் கேட்டும் விட்டார்கள். ‘ராஜமோகனா… நான் பாக்குறேன்யா’ என்று பதில் சொல்லியிருக்கிறார் நேரு.
காலை ஆரம்பித்த விசாரணையை மதியம் 2.30 வரை நடத்திவிட்டே திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் கே.என். நேரு. இதுவரை தலைமை மூலம் நடந்த விசாரணைகளை விட இந்த விசாரணை மீது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. பார்ப்போம் என்று காத்திருக்கிறார்கள் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக தொண்டர்கள்.
**(திருப்பூர் தெற்கு மாவட்ட விசாரணை தனி செய்தியாக)**
**-ஆரா**
�,”