பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று சாமானிய மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த மார்ச் 13ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது மத்திய அரசு. இதுதவிர, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சாலை வரியும் ரூ.1 உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த எட்டு நாட்களாக தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு நாட்களில், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 4.52 ரூபாயும், டீசல் ஒரு லிட்டருக்கு 4.64 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சென்னையில் நேற்று பெட்ரோல் 79.53 ரூபாய்க்கும், டீசல் 72.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று (ஜூன் 14) விசிக தலைவர் திருமாவளவன், “பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்துகிற நடைமுறையைத் தமிழக அரசு இப்போது கடைப்பிடித்து வருகிறது. கடந்த எட்டு நாட்களில் லிட்டருக்கு சுமார் ஐந்து ரூபாய் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்திருக்கிறது. கொரோனா பேரிடர் நேரத்தில் மக்களைக் கசக்கிப் பிழியும் விதமாக இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து, “மத்தியில் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான எக்சைஸ் வரியை உயர்த்தி வருகிறார். இதனால் ஆண்டொன்றுக்கு இரண்டரை லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை மத்திய அரசுக்கு வருவாய் வருகிறது. அந்த வருவாயைக்கொண்டு மக்கள் நலத் திட்டங்கள் எதையும் மத்திய அரசு செயல்படுத்துவதில்லை. மாறாக இதையெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டிய திருமாவளவன்,
இந்தப் பேரிடர் காலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கோ புலம்பெயர் தொழிலாளர்களுக்கோ எந்த ஒரு நிவாரணத்தையும் மோடி அரசு அளிக்கவில்லை. இதனால் மக்கள் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வறுமையில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது மோடி அரசு என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், “உலகில் எந்த ஒரு நாடும் தனது குடிமக்களை இந்தப் பேரிடர் காலத்தில் இப்படிக் கொடுமைப்படுத்தவில்லை. ஈவிரக்கமற்ற அரசாக மத்திய அரசும் அதற்கு ஏற்ப தாளம் போடும் அரசாக தமிழக அரசும் இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தட்டிக் கேட்க முடியாதபடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மக்கள் விரோத விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுக்க முடியாது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருமாவளவன்.
**எழில்**�,