Zரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை!

Published On:

| By Balaji

ரஜினியின் அரசியல் வருகை தொடர்பாகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக நேற்று (மார்ச் 12) சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அரசியல் மாற்றத்துக்காக மூன்று திட்டங்களை வைத்துள்ளேன். நான் முதல்வராகப் போவதில்லை. வேறொரு நல்லவரை, சிந்தனையாளரை முதல்வராக்குவேன். நான் கட்சியின் தலைவராக மட்டுமே இருப்பேன். 54 ஆண்டுக்கால திமுக, அதிமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. மக்கள் மத்தியில் புரட்சி உண்டாக வேண்டும். மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகே அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ரஜினியின் கருத்தை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், “ரஜினிகாந்தின் இன்றைய பேச்சு அவர் அரசியலுக்கும் வரப்போவதில்லை, கட்சியும் தொடங்கப் போவதில்லை என்பதையே காட்டுகிறது. கட்சி தொடங்கினால் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும், இல்லையெனில் கட்சியைத் தொடங்கப்போவதில்லை என்ற உளவியல் பார்வை அவரிடம் உள்ளது. ரஜினி விரும்புவதுபோல அனைத்தையும் சீர்செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னால், யாராலும் எந்தக் காலத்திலும் அரசியலுக்கு வர முடியாது. பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற தொண்டு உள்ளம் இருந்தால் உடனடியாக அரசியலில் ஈடுபட வேண்டும். அதற்கு வயதும் காலமும், களமும் ஒரு பொருட்டல்ல” என்று தெரிவித்தார்.

மேலும், “குளம் அல்லது குட்டை நாறுகிறது என்பதற்காக மீன்கள் தரைக்கு வருவதில்லை. அதைச் சுத்தம் செய்துதான் வாழ்கின்றன. அதுபோலதான் அரசியலும். சிஸ்டம் சரியில்லை என்றால் அவர்தான் இறங்கி சரிசெய்ய வேண்டும். யாராவது சீர்செய்யுங்கள் என்று சொல்வது உகந்தது அல்ல. அரசியலுக்கு வரப்போவதில்லை என ரசிகர்களுக்கு ரஜினி நேரடியாகவே சொல்லி விடலாம்” என்றும் கருத்து தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் பாஜகவில் இணைய வேண்டும் என நான் நீண்ட காலமாகச் சொல்லிவருகிறேன். அவர் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில், பாஜகவில் இணையச் சொல்வது முறையாக இருக்காது.

மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் மூலம் மக்கள் மாற்றத்தைத் தேடினார்கள். அவரும் அந்த மாற்றத்தைக் கொடுத்தார். ஆனால், அதில் மக்களுக்குத் திருப்தியில்லை. ஆகவே 93, 94 காலகட்டத்தில் வைகோவை எதிர்பார்த்தார்கள். அதன்பிறகு மூப்பனாரையும், பின்னர் விஜயகாந்தையும் எதிர்பார்த்தார்கள். மக்கள் மாற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்களிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று தெரிவித்தார்.

முத்தரசன் கூறுகையில், “ரஜினியின் அறிவிப்பிலிருந்து அவர் தனது அமைப்பையே நம்பவில்லை என்று தெரிகிறது. ரஜினி தற்போது குழப்பத்தில் இருக்கிறார். அதோடு தனது ரசிகர்களையும் குழப்பிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

**-எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share