tதிருக்குறள் திமுகவின் குடும்ப சொத்தா? பாஜக

Published On:

| By Balaji

மோடி திருக்குறளை மேற்கோள்காட்டுவது தொடர்பாக ஸ்டாலினுக்கு எல்.முருகன் பதிலளித்துள்ளார்.

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ 9,10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் சிந்தனைகள், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், “இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற சிபிஎஸ்இ பாடத்தை நீக்குகிறார்.

தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் நோட்டா வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என்று சாடியிருந்தார்.

இதற்கு இன்று (ஜூலை 21) பதிலளித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், “உலகப் பொதுமறையான திருக்குறள் உலகம் முழுமைக்கும் சொந்தமானது. இதன் பெருமைகளை பாரதப் பிரதமர், உலகமறியச் செய்து கொண்டிருக்கின்றார். தமிழ் மறையாம் திருக்குறளை, இமயத்தின் உச்சியில் நின்று பேசுவதை தங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ராணுவ உடை அணிந்து, திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினால் தமிழர்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா? என்று , மொழியை வைத்து அரசியல் நடத்தும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் கேட்டது கண்டனத்திற்குரியது. திருக்குறள் திமுகவின் குடும்பச் சொத்தல்ல. தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு, தமிழை உயர்த்தும் தலைவரின் மகத்துவம் புரியாது” என்று சாடியுள்ளார்.

முருகனைப் பற்றி அவதூறு பரப்பி, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டத்தை வாய் திறந்து கண்டிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏனோ மனம் வரவில்லை எனவும், தமிழகத்தில் கோடிக்கணக்கான முருக பக்தர்களுக்கு ஸ்டாலின் தரும் மரியாதை அவ்வளவுதான் என்று குறிப்பிட்ட எல்.முருகன், “இந்து மத உணர்வுகளை எப்போதுமே மதிக்காதவர் ஸ்டாலின் என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று” என்றும் சாடினார்.

மேலும், “இப்போது தேர்தல் நெருங்குகிற காலம் என்பதாலும், இந்து மதம் சார்ந்த மக்கள், ஸ்டாலினின் இந்து மத விரோதப் போக்கைப் புரிந்து வேதனைப்படத் தொடங்கியுள்ளனர் என்பதாலும்தான், ஆர்.எஸ். பாரதி போன்றோர் எங்கள் கட்சியிலும் பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கிறார்கள், திமுக தலைவர் கருணாநிதி கோயில் குளத்தைச் சுத்தப்படுத்தினார் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது. மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்போது தமிழ்க்கடவுள் முருகனை கொச்சைப்படுத்துவதை வேடிக்கையாக பார்த்தீர்களோ, அப்போதே உங்கள் திராவிட மாயை மக்களுக்குப் புரிந்து விட்டது. இனியும் திராவிடம் பேசி தமிழர்களை ஏமாற்ற முடியாது”. எனவும் விமர்சித்துள்ளார் எல்.முருகன்.

எனினும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதற்கு முருகன் எவ்வித பதிலையும் கூறவில்லை.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share