சிறப்புக் கட்டுரை: கைகளால் சிந்திக்கும் கலையை காந்தி எப்படிக் கற்றுக்கொண்டார்?

politics

திரிதீப் ஷ்ருத்

1922ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். சிறை நிர்வாகத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கமான படிவத்தில் தனது தொழிலாக விவசாயி, நெசவாளர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

காந்தியின் சுய அறிமுகம் தொடர்பான இந்தச் சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம், காந்தி தொடர்பான ஆய்வில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன், 1916இல் குஜராத் மொழிக் கழகத்தில் ஆயுள் உறுப்பினராக இணைவதற்கான படிவத்தில், சுய உழைப்பில் வாழும் ஆசிரியர் எனக் குறிப்பிட்டிருந்தவர், தனது மாத வருமானம் ரூ.30.1 என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு அரசு விண்ணப்பப் படிவத் தகவல்களுக்கு இடையே காந்தியின் சுய புரிதல் பயணம் தொடர்பான கதை மட்டும் அல்லாமல், பணி மற்றும் சுதந்திரத்துடனான அதன் உறவு குறித்து புதிய புரிதலை நாடும் தத்துவ இயக்கமும் அடங்கியிருக்கிறது.

1911 வரை காந்தி வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1915இல் தென்னாப்பிரிக்காவில் இருக்கும்வரை, வழக்கறிஞராக இருப்பது அவரது வாழ்க்கை, பணி, சுய உணர்தலில் முக்கியமாக இருந்தது. அவர் நீதிமன்றத்தில் வாதாடுவதைக் கைவிட்டபோதும்கூட அவர் வழக்கறிஞராகவே தொடர்ந்தார்.

காந்தியின் சுய உணர்தலில் ஏற்பட்ட மாற்றம் வாழ்க்கை வரலாற்று நோக்கில் அல்லது குறிப்பிட்ட சூழலுக்கான எதிர்வினையாக விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு வெளிப்புற மாற்றமாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. 1913 டிசம்பர் 21ஆம் தேதி, காந்தி 1888 முதல் அணிந்துவந்திருந்த அபிமான ஆடையைக் கைவிட்டு, விவசாயிகளின் வேஷ்டி, குர்தாவை அணியத் தொடங்கினார். 1921இல் அவர் ஏழைக் குடியானவர்கள் போல இடுப்பில் வேஷ்டி மட்டும் அணியத் தொடங்கினார்.

ஆடையின் அரசியல், அதன் அடையாளபூர்வமான அர்த்தம் ஆகியவை உடைகள் தொடர்பாக காந்தியின் மாறிவந்த உணர்தலைப் புரிந்துகொள்ள அவசியம் என்றாலும், பணி, உடல் உழைப்பு தொடர்பான காந்தியின் புரிதல் மாற்றத்தையும் தனியே கவனிக்க வேண்டும்.

**உடல் உழைப்பு குறித்த பார்வை**

உடல் உழைப்பு தொடர்பாக நுண் உணர்தலைக் கொள்ள வைக்கும் அளவுக்கு காந்தியின் சமூக, கலாச்சார, பொருளாதார, கல்விப் பின்னணியில் எதுவும் இல்லை. பல தலைமுறைகளாக காந்தி குடும்பத்தினர், நிர்வாகிகளாக இருந்துள்ளனர். காந்தி தொடர்பான எந்த வரலாற்றுக் குறிப்பிலும் அவரது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்ட, சொந்தமாக நிலம் கொண்ட குடும்பம் எனக் குறிப்பிடப்படவில்லை. நிலம் இல்லாதது முக்கிய அம்சமாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலம் அளிக்கப்படுவது, குறிப்பாக திவான் போன்ற நிர்வாகிகளுக்கு அளிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

போர்பந்தர், ராஜ்கோட்டில் காந்தி குடும்பத்தில் வேலைக்காரர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுவது, அவருடைய நிர்வாக, கலாச்சார, பொருளாதார அந்தஸ்துக்கு ஏற்றதாக இருக்கிறது. எனவே, காந்தியின் ஆரம்ப கால சமூகப் பழக்கங்கள், உடல் உழைப்பு தொடர்பானதாக அமையவில்லை.

**கால்களும் கைகளும்**

இங்கிலாந்தில் மாணவராக இருந்தபோதுதான், காந்தியின் வாழ்நாள் ஈடுபாடான நடைப்பயிற்சி மீதான நெருக்கமான ஆர்வம் அவருக்கு உண்டானது. நடப்பது காந்தியின் கற்பனை, அரசியல், சுய செயல்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்தது. எனினும், அரசியல் செயல்பாடாகவோ, உடலைப் பேணிக்காக்கவோ, தியானமாகவோ நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பது கைகளால் கடுமையாக வேலை செய்வதற்கு ஈடாகாது.

லண்டனில் மாணவராக இருந்ததும் தென்னாப்பிரிக்காவில் கஸ்தூரிபா, மகன்கள் இல்லாமல் தனித்து இருந்ததும் சுய சார்பில் மதிப்புமிக்க பாடங்களை அவருக்குக் கற்றுத் தந்திருந்தது.

காந்தியின் சிக்கன குணம், அவர் எதிர்கொண்ட இனப் பாகுபாடு ஆகியவை அவரை சுய சார்பு கொண்டவராக உருவாக்கின. அவர் தானே சவரம் செய்யக் கற்றுக்கொண்டதோடு, தனது தலைமுடியைத் திருத்திக்கொள்ளவும் கற்றுக்கொண்டார். துணி துவைக்கும் சேவையையும் மறுத்துவிட்டு, அவர் தனது ஆடைகளைச் சலவை செய்யக் கற்றுக்கொண்டார். சமைக்கவும் முயற்சி செய்தார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி சிறந்த செவிலியராகவும் உருவானார். கறுப்பின மக்களுக்கு சேவை செய்ய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தால் இந்தத் திறனைக் கற்றுக்கொண்டார். ராஜ்கோட்டில் இளைஞராக இங்கிலாந்தில் எதிர்காலம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவர் மருத்துவராக வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாலும், கலாச்சாரத் தடைகள், தயக்கம் ஆகியவை அந்த வாய்ப்பைத் தவிர்க்கவைத்தது. தென்னாப்பிரிக்காவில் அவர் செவிலியர் பணி அழைப்பை உணர்ந்து கொண்டார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வந்தபோது சாப்பாடு மட்டும் கொடுத்து அனுப்ப மனம் இல்லாமல், அவரது காயங்களுக்கு மருந்தளித்தார். காந்தி செவிலியராகப் பயிற்சி பெற்றதோடு, உதவியாளராக மருந்து எடுத்துக் கொடுக்கவும் கற்றுக்கொண்டார். செவிலியராக ஆனதன் மூலம், அழுக்கானவற்றைத் தொடுவது, இறந்தவர் உடலைத் தொடுவது தொடர்பான தனது வைணவக் குடும்பத்தின் கலாச்சார ஒவ்வாமை உணர்வை வெற்றிகொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் காந்தி அனைத்து இந்திய சாதிகளுக்கும் மனித மலம் தொடர்பாக இருந்த தவறான எண்ணத்தை வெற்றிகொண்டார். காந்தி, தனது கழிவுகளை மட்டும் அல்லாமல், வீட்டில் தங்கியவர்களின் கழிவுகளையும் சுத்தம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார். வீட்டில் விருந்தினர்களின் கழிவுகளை கஸ்தூரிபாவை சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தியபோது ஏற்பட்ட ஆழமான, வலி, தயக்கம், கவலை, தியான உணர்வை அவர் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

இந்த அனுபவங்கள் அவரை உடல் உழைப்பு குறித்து வேறு தத்துவார்த்த, அரசியல் தளத்தில் சிந்திக்க வைத்தது.

**திருப்புமுனைத் தருணங்கள்**

இரண்டு முக்கிய தாக்கங்கள், கைகளால் பணி செய்வதன் மீதான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் உண்டாக்கின. முதல் அனுபவம், டர்பன் நகருக்கு வெளியே இருந்த துறவிகள் சமூகத்தில் அவருக்கு உண்டானது. உண்மை, அகிம்சை சார்ந்த சமூகத்தை உண்டாக்குவதில் காந்திக்கு இது ஈடுபாட்டை உண்டாக்கியது. இரண்டாவது அனுபவம் சிறை சென்றபோது உண்டானது. தென்னாப்பிரிக்கச் சிறைகளில் கடுமையாக வேலை செய்ய வேண்டும். காந்தி அந்த வேலைகளைச் செய்தார். அவரது உடல் கடின உழைப்புக்குப் பழகியதல்ல. சிறை அனுபவம், அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. கடின உழைப்பு கட்டாயமானது.

பொருள் சார்ந்த உலகுடனான அவரது தொடர்பு கைகளால் பணி செய்யும் அவரது திறனின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. பொருட்களைப் புரிந்துகொண்டு, அவற்றுடன் மாற்றத்துக்கான அனுபவத்தை அவரால் பெற முடிந்தது. பொருட்கள் தொடர்பான கலாச்சார அம்சங்கள் அல்லாமல், அவற்றின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள உதவியது. பொருட்களுடன் வேலை செய்வதன் மூலம், அவர் பொருளை மட்டுமல்ல, தன்னையும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்தார். இந்தச் செயல்முறை மூலம், பொருள் சார்ந்த உலகால் மாசுபடும் சாதிய இந்து உணர்விலிருந்து விடுபட்டு, நவீன மனிதராக காந்தி உருமாற்றம் அடைந்தார்.

**

கட்டுரையாளர் – **திரிதீப் ஷ்ருத்** (Tridip Suhrud) மகாத்மா காந்தி நாட்குறிப்பின் இரண்டாவது பகுதியில் ஆய்வு செய்துவருபவர்.

நன்றி: **[இந்தியா ஃபோரம்](https://www.theindiaforum.in/article/thinking-hands?utm_source=website&utm_medium=organic&utm_campaign=featured-articles&utm_content=Homepage)**

தமிழில்: **சைபர் சிம்மன்**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.