தேனி: வேலையின்றி தவிக்கும் கேரள தோட்டத் தொழிலாளர்கள்!

politics

கேரளா எல்லையில் உள்ள மிளகு, ஏலக்காய், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு, தமிழ்நாடு தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி வட்டாரங்களில் இருந்து சுமார் 1800 ஜீப்புகளில் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி வழியாக 27 ஆயிரம் தொழிலாளிகள் தினந்தோறும் வேலைக்குச் சென்றுவந்தார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று தாக்கத் தொடங்கியதும் மார்ச் மாதமே கேரளாவின் எல்லைகள் மூடப்பட்டன. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு வேலைக்குச் சென்ற பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடிவருகிறார்கள்.

இதுதொடர்பாக ஜீப் ஓட்டுநர் சிவாவிடம் பேசினோம்…“கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளிகளை நம்பி ஜீப் ஓட்டுநர்கள் மட்டும் சுமார் 2,500 பேர் இருக்கிறோம். இந்த ஊரடங்கின் காரணமாக எங்களது வாழ்வாதாரமே முடங்கிவிட்டது.

தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு காலையில் 5.30 மணிக்குப் புறப்படுவோம், மாலையில் 6.30 மணிக்கு ஊர் திரும்புவோம். நாள் முழுவதும் வேலை செய்தால் 400 ரூபாய் கூலி கொடுப்பார்கள், அதைவைத்து தான் அன்றாடம் சாப்பாட்டுக்கு வேண்டியதை மெட்டு மக்கள் (மலையில் வசிப்பவர்கள்) வாங்கிப் போவார்கள்” என்று கூறினார்.

ஊரடங்கின் காரணமாக ஜீப் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளிகள் என சுமார் 30 ஆயிரம் பேர் கடந்த மூன்று மாதமாக வெளியில் போகமுடியாமல் இருப்பதால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. வேலைக்குச் செல்லக்கூடிய மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டாம். கேரளாவுக்குப் போவதற்கு அனுமதி பெற்றுக் கொடுங்கள் என்று மனு அளித்துள்ளனர். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து கோரிக்கை வைத்தோம் என்றும் ஜீப் ஓட்டுனர் சிவா கூறினார்.

இதுதொடர்பாக நாம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தோம்…கலெக்டர் பல்லவி பல்தேவ் இதுதொடர்பாக கேரளா மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். வேலைக்குப் போகும் மக்களுக்கு மட்டும் அனுமதி கொடுங்கள் என்று அவர் கூற, சரியான ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்றார்கள். துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேரளா அரசிடமும், அமைச்சர் எம்.எம்.மணியிடமும் பேசியும் எந்தப்பலனும் இல்லை என்றார்கள்.

இது ஒரு புறம் இருந்தால் தேனி மாவட்ட மக்கள் வேலைக்குப் போக வேண்டும் என்று போராடுவது போல், கேரளா மாநிலத்தில் வசிக்கும் வியாபாரிகள் மற்றும் தோட்ட முதலாளிகளும், தேனி மாவட்ட மக்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், வேலை நடைபெறாததால் மிளகு, ஏலக்காய் பயிர்கள் பாழாய்போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களும் அமைச்சர் எம்.எம்.மணியிடம் முறையிட்டுள்ளனர்.

** எம்பி.காசி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *