ஊரடங்கின் நோக்கம் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பினும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 146 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக அதிகரித்துள்ளது. இதில் 80,722 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 60,490 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நாடு முழுவதும் 4,167 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனினும், ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இன்று (மே 26) செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “60 நாட்களாக ஊரடங்கில் இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக உயரும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். ஆனால், மத்திய அரசு படிப்படியாக ஊரடங்கை ரத்து செய்து வருகிறது. ஊரடங்கு என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அது தோல்வியடைந்துவிட்டது. ஊரடங்கு தோல்விக்கான விளைவுகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு தயவு செய்து பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய ராகுல் காந்தி, “கொரோனா வைரஸ் வேலையின்மை பிரச்சினையை பெரிதாக்கியுள்ளது. இதனால் பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திவாலாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு உதவ வேண்டும். நாட்டின் வலிமையாக விளங்கும் ஏழை மக்களுக்கு தோள் கொடுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாம் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை சந்திப்போம்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “பிரதமரின் பொருளாதார ஊக்கத் தொகுப்பு குறித்த நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். ஜிடிபியில் 10 சதவிகிதத்தை பொருளாதார தொகுப்புக்கு செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினாலும், உண்மையில் 1 சதவிகிதத்திற்கும் குறைவான அறிவிப்புகளே வெளியாகியுள்ளன. அதிலும் பெரும்பாலானவை கடன் அளிப்பதாகத்தான் உள்ளது. மக்களுக்கு பணம் வழங்குவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை” என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் வியூகம் என்ன என்று கேள்வி எழுப்பிய ராகுல், “நான்கு முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிலும் பிரதமரும், அவரது சகாக்களும் எதிர்பார்த்த நிலை அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், மே மாதம் இறுதிக்குள் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கும் என அவர்கள் கூறினர்” என்றும் குறிப்பிட்டார்.
**எழில்**�,