[தக்க சமயத்தில் தங்கத்துக்கு பதவி!

Published On:

| By Balaji

திமுகவின் தேனி மாவட்டப் பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 1) வெளியிட்ட அறிவிப்பில், “தேனி மாவட்டம் கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடந்திடவும் தேனி வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகள் அடங்கிய தேனி தெற்கு மாவட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணன் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். போடிநாயக்கனூர், பெரியகுளம் தொகுதிகளை உள்ளடக்கிய தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்படுகிறார்” என்று அறிவித்தார்.

‘தேனி வடக்கு – தேனி தெற்கு மாவட்டங்கள் வரையறை மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்’

– தலைமைக் கழகம் அறிவிப்பு.#DMK pic.twitter.com/MeHFfPE5fn

— DMK (@arivalayam) October 1, 2020

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க.தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

முன்னதாக அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தனக்கும் அதேபோன்ற பதவியை அவர் எதிர்பார்த்தார். எனினும், அமமுகவில் வகித்த அதே கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை தங்க தமிழ்ச்செல்வனுக்கு வழங்கியது திமுக. அமமுகவில் இருந்த அளவுக்கு திமுகவில் தங்க தமிழ்ச்செல்வனின் செயல்பாடுகள் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.

இந்த நியமனம் பற்றி தேனி மாவட்ட திமுக வட்டாரங்களில் பேசியபோது, “தற்போது அதிமுகவில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருவதையடுத்து, தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் அவரிடம் பேசியுள்ளனர். திமுகவில்தான் நமக்கு மதிப்பில்லை. இப்போது, அதிமுகவில் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கியுள்ளது. ஆகவே, மீண்டும் அதிமுகவுக்கு சென்றுவிடலாமா என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் தன் மீது நல்ல அபிப்ராயம் வைத்துள்ளதால் தங்க தமிழ்ச்செல்வன் யோசித்திருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது அவர் ஆசைப்பட்ட பதவியே கிடைத்திருக்கிறது” என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும் அதிமுகவில் இருந்தபோதே பன்னீர்செல்வத்தை எதிர்த்துதான் தங்க தமிழ்ச்செல்வன் அரசியல் செய்து வந்தார். இதனால் தேனியில் அவரை எதிர்க்க சரியான ஆள் தங்கம்தான் என நினைத்திருக்கிறது திமுக தலைமை. ஆகவேதான், பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் அமைந்துள்ள பெரியகுளம் தொகுதிக்கும், அவர் சட்டமன்ற உறுப்பினராகவுள்ள போடிநாயக்கனூர் தொகுதிக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்கள் தங்கத்தின் ஆதரவாளர்கள்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share