அமித் ஷா தலையிடுவார்: அதிமுகவுக்கு பாஜக எச்சரிக்கை!

Published On:

| By Balaji

கோயில்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக அரசை விமர்சித்துள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

கோவை சுந்தராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை தாக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 3 இடங்களில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோவையில் ஜூலை 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “காவல் துறையை எதற்கு கட்டுப்படுத்த வேண்டும், எதற்கு கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் அரசுக்கு ஒரு தெளிவு வேண்டும். கோயில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து, முழுமையான விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. அதனால் தற்போது அரசுக்கு முதல் எச்சரிக்கை விடுத்திருக்கிறோம்” என்று சாடினார்.

இந்து கோயில்கள் தாக்கப்பட்டதற்கு எதிரான ஸ்டாலினின் அறிக்கை, அவர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை விட இந்து மக்களைப் பற்றி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதைத்தான் காட்டுவதாகத் தெரிவித்த ராதாகிருஷ்ணன்,

“8 ஆயிரம் வாக்குகளில் கிடைத்த வேலூர் வெற்றியும், 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலான இடைத் தேர்தல் தோல்வியுமே ஸ்டாலினுக்கு எதார்த்த நிலையை உணர்த்தியுள்ளது. இதனை பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் புரிந்துகொள்ளவில்லை என்றால் வரும் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்றும் கூறினார்.

மேலும், “வாக்கு வங்கியை மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடவும் பாஜக தயங்காது. தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பாஜகவுக்கு இரண்டாவது சிந்தனைதான். முதலில் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்” என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share