ஸ்ரீராம் சர்மா
**கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்**
**கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல**
**பல்விதமாயின சாத்திரத்தின் மணம்**
**பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு!**
நான்கு வரிகளில் மூன்று முறை தமிழ்நாடு தமிழ்நாடு என முரசறைந்து அன்றமைந்த திராவிடப் பிரதேசங்களில் ஆகச் சிறந்தது எங்கள் தமிழ்நாடே எனத் தம்பட்டம் அடித்துத் திரிந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!
பல்விதமாயின சாத்திரம் என்ற வரிகளின் வழியே, எங்களிடம் மருத்துவ சாத்திரம், பொறியியல் சாத்திரம் எனப் பலவும் அடங்கி நின்றதடா, மேலுமது பாரெங்கும் மணம் வீசும் பார் எனப் பித்துக்கொண்டுப் பிரண்டலைந்தார்.
எப்பேர்ப்பட்ட தலைநிமிர்வுப் பிரகடனம் அது! அதனால்தான், அவர்பால் தன்னை இழந்து ‘பாரதிக்கு நான் தாசன்’ என நெக்குருக நலம்பாடி நின்றார் நமது பாவேந்தர்!
அப்படியாகப்பட்ட தமிழ்நாட்டில் இன்றைய கல்வியின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டிய சூழல் இது.
பத்தாண்டுகளுக்குப் பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் கழகம் கவனம் செலுத்தி பாரபட்சம் இல்லாமல் கல்வியை வளர்த்தெடுத்தாக வேண்டிய கால கட்டம் இது!
அந்தப் பொறுப்பை தகுதியுள்ளவரிடம் தந்து தட்டிக்கொடுத்ததுதான் இன்றைய முதல்வரின் ஏற்றம்!
**மகேஷ் பொய்யாமொழி**
எம்.சி.ஏ பட்டம் படித்த பட்டதாரியாக – நல்லரசியலை தன் தந்தையின் வழியிலும் தலைவன் வழியிலும் கொண்டு நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் வீரியத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளைய அமைச்சராக நம்பிக்கை அளிக்கிறார்.
தன்னை நம்பிய தலைமைக்குத் தக்கதொரு புகழை சேர்த்துவிட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் – உள்ளார்ந்து சிந்திக்கும் அவரை நம்பி சில விஷயங்களைச் சொல்லிவிட்டால், அதில் ஆழ்ந்த பொருளுண்டானால் விரைந்து செய்துவிடுவார் என்னும் நம்பிக்கை அதிகாரிகளிடையே பரவி வருகிறது என்பதால் நம்பித் தொடர்வோம்!
**இன்றைய கல்வி!**
துள்ளித்திரிகின்ற பருவத்தே என் துடுக்கடக்கிப்
பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே!
எனத் தலையிலடித்துக் கொண்டார் சங்ககாலப் புலவர் ஒருவர்.
ஆம், கல்விதான் ஒருவனை சான்றோனாக்க வல்லது. சான்றோனாக்கும் கல்வியோ ஆசிரியர்களிடம் இருந்தே தொடங்கி நகர்கிறது.
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்கிறது நறுந்தொகை! அப்படிப்பட்ட ஆசிரியர்களின் தரத்தை எப்பாடுபட்டேனும் உயர்த்தியே ஆக வேண்டும்.
ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு தாய்மொழிக்கல்வி மிக மிக அவசியம் என்பது உலகளாவிய உண்மை. ஆனால், இன்றைய பெரும்பாலான ஆசிரியர்களின் நாவில் ‘ல’கர, ‘ள’கரம்கூட வெளிப்படாதது மட்டுமல்ல… அதுகுறித்த அக்கறையும் இல்லாமல் இருக்கின்றதே…
ஆசிரியர்களின் நாவிலேயே கல்வி இல்லை என்றான பின், மாணவர்களைக் குறை சொல்லி என்ன பயன்?
ஆக, கல்வியை ஆசிரியர்களிடமிருந்தே சரி செய்தாக வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து ஆவன செய்தாக வேண்டும் அமைச்சர். ஆம், முதலில், கற்பிப்பவர்களை நோக்கிக் கவனம் செலுத்தியாக வேண்டும்.
அதற்கு நீண்ட காலத் திட்டம் ஒன்றைப் போர்க்கால நடவடிக்கையாக வரையறுத்தாக வேண்டும். ஆசிரியர்களுக்குண்டான தரத்தேர்வுகளை நிர்தாட்சண்யமாக நிலை நிறுத்தியாக வேண்டும்.
கல்லூரிக்கு வந்து சேரும் மாணவ மாணவியருக்கு இரண்டு வாக்கியங்களைக்கூட சேர்ந்து படிக்க முடிவதில்லை என்றால் அதற்கு யார் காரணம்? உயர்கல்வி ஆசிரியர்களால் அப்படிப்பட்டவர்களை எப்படி அடுத்த கட்டத்துக்கு உயர்த்திவிட முடியும்?
உலகம் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. மொழியோ – தொழிலோ எதையும் முறையாகக் கையாளத் தெரியாதவர்களுக்கு இந்த உலகம் நல் வாய்ப்பினை அளித்து விடுவதில்லை.
உயர்ந்த நிறுவனங்களில் நகரக்கல்வி படித்த உயர்சாதியினருக்கு மட்டுமே நல்ல நல்ல பொறுப்புகள் அளிக்கப்படுகிறது என்று குறை சொல்வதைவிட உண்மையான குறை எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டு அதைச் சரி செய்து கொண்டு வருவதன் மூலமே எதிர்கால சமுதாயத்தில் சமதர்மம் காண முடியும்!
நகரத்து ஆசிரியர்களுக்கும், கிராமத்து ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் அவர்களது போதிக்கும் திறனை சமன்படுத்தியாக வேண்டும். அதற்காக தனிப் பயிற்சி கொடுத்தாலும் தகும். அதற்கெனத் தனித்திட்டங்களைத் தொலைநோக்குச் சிந்தனையோடு உடனடியாக வகுத்து விடுவது நல்லது.
போலவே, ஆசிரியர்களுக்கான ஒழுக்க விதிகளையும் இறுக்கியாக வேண்டும். இன்று, ஆசிரியப் பணியில் இருப்பவர்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கப்படுகின்றது. தொடக்க சம்பளமே 60,000 ஆகவும் – ஓய்வூதியக் காலத்து சம்பளம் இரண்டு லட்சத்தையும் தாண்டும் என்கிறார்கள்.
ஆனாலும், 80 சதவிகித ஆசிரியர்கள் இரண்டாம் தொழிலை செய்கிறார்கள். வட்டி வியாபாரம் முதற்கொண்டு – ஃபேன்ஸி ஸ்டோர் வரை பலவகையில் கவனம் சிதறுகிறார்கள்.
நடுத்தெருவில் வட்டிக்குச் சண்டை போடும் ஆசிரியர்மீது மாணவர்களுக்கு எப்படி மரியாதை வரும்? பயபக்தி வரும்?
புனிதமான ஆசிரியர் தொழிலில் கை நிறைய சம்பளமும் வாங்கிக்கொண்டு அதுபோக இரண்டாம் தொழிலுக்கும் ஆசைப்படும் பொறுப்பற்றவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் பணியிலிருந்து விடுவித்து விடலாம்.
போலவே, ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டு முறையும் சீர் செய்யப்பட வேண்டும். காலையில் கையெழுத்துப் போட்டுவிட்டு இரண்டு மணி நேரத்தில் சொந்தத் தொழிலை(!?) பார்க்கப் போய்விடுவதாக புகார்கள் உள்ளன.
இதற்குத் தீர்வுகாணும் வகையில் ‘பயோ மெட்ரிக் சிஸ்டம்’ கொண்டு வந்து ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யலாம். இதில் தவறொன்றும் சொல்ல முடியாது. ‘பொறுப்புக்கூறல்’ என்பது அரசாங்கம் உட்பட அனைவருக்கும் பொதுவானது.
நடைமுறையில் இருக்கும் பள்ளிகளுக்கான ‘புத்தாக்கப் பயிற்சியை’ முதல் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை மேலும் ஆக்கபூர்வமானதாக நிலைநிறுத்த வேண்டும். ஆசிரியர்களின் போதிக்கும் திறனை காலாண்டுக்கொரு முறை ஆய்வு செய்தல் நலம்.
ஆசிரியர் சங்கத் தலைமைகள் தங்களை தகவுடையதாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தச் சமூகம் கரம்கூப்பி எதிர்பார்க்கிறது. சம்பள உரிமைக்காக, சலுகைக்காக அரசாங்கத்தை நெருக்கிப் பிடித்து தெருவில் இறங்கிப் போராடும் ஆசிரியர் சங்கம் அதே வீச்சோடு…
இந்த மண்ணின் கல்வித்தரம் குறித்தும் ஒரு போராட்டம் நடத்துவார்கள் என்றால் இந்தச் சமுதாயத்துக்கு அவர்கள் மேல் பெருத்த மரியாதை உண்டாகும். பெற்றோர்களுக்கு நம்பிக்கையும் நிம்மதியும் பெருகும்.
வளர்பருவத்தில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களைவிட பள்ளிக்கூடங்களில்தான் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆசிரியர்கள் என்போர் இரண்டாம் பெற்றோர் (Second Parents) எனப்படுகின்றனர்.
அத்தகைய பெருமைகொண்ட ஆசிரியர்கள் தங்கள் நடத்தையில் ஓங்கி இருந்தாக வேண்டும்.
ஆம், மரியாதைக்கும் மதிப்புக்கும் உரிய ஆசிரியர்களின் கீழ் கல்வி கற்று வளரும் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஆளுமைகளாக வெளிப்படுகின்றனர்.
**சுருங்கச் சொல்வதென்றால்…**
தலைநகரமான சென்னையில் எத்தனையோ பள்ளிகள் இருக்கின்றன. ஆனாலும், ஒரு சில பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிட முண்டியடிக்கின்றனரே பெற்றோர். அது ஏன்?
அரசாங்கப் பள்ளிகளில் – கார்ப்பரேஷன் பள்ளிகளில் ஒருசில பள்ளிகள் மட்டும் உயர்ந்த கல்வியை அளிக்கும் திறன் பெற்றனவாய் விளங்குகின்றனவே… அது எப்படி?
அந்தப் பள்ளிகளை நிர்வகிக்கும் திறன்தான் அதுபோன்றதொரு பலனை அளிக்கிறது எனில், அந்தத் திறனை ஏன் பரவலாக்கிவிடக் கூடாது?
**முயன்றால் முடியாது எது?**
இன்று, தனிப்பெரும் பலத்தோடு அரசாளும் வாய்ப்பைக் கொடுத்து நம்பிக் காத்திருக்கின்றார்கள் மக்கள். இதுகாறும் அவர்கள் காணாதபடிக்கு ஒரு முன்னேற்றத்தை இந்த அரசாங்கத்தால் கொடுத்துவிட முடியும் என்றால்… அடுத்த முறையும் மக்களே முன் வந்து இந்த அரசாங்கத்தை நீட்டிக்கச் செய்வார்கள்.
நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றத் தோதாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொடுத்து விடுவார்கள் என்பது சர்வ நிச்சயம். மக்களுக்குத் தேவை நல்லாட்சி மட்டுமே!
ஆம், கல்விதான் ஒழுக்கம் தரும். கல்விதான் கண்ணியம் சேர்க்கும். கல்விதான் குடும்பத்தை உயர்த்தும். கல்விதான் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும்.
அஸ்திவாரம் பள்ளிக்கல்விதான். அடிப்படைக் கல்வியை நிர்ணயிக்கும் ஆசிரியர்களின் தரம் உயர்ந்தபட்சமாக நிலைநிறுத்தப்பட்டே ஆக வேண்டும்.
**ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு**
**எழுமையும் ஏமாப்புடைத்து**
என்றார் பொய்யாமொழிப் புலவர்!
குறள்வழி போற்றும் இந்த ஆட்சியில் கொள்கை வழி நிற்கும் நமது கல்வி அமைச்சர் ஆவன செய்து அரசேற்றுவார் என உளமார நம்புவோம்.
வாழ்த்தித் துணை நிற்போம்!
**கட்டுரையாளர் குறிப்பு**
**வே.ஸ்ரீராம் சர்மா ** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
.
�,”