“இனி கேப்டன்…”- கண்ணீர் விட்ட பிரேமலதா: தேமுதிகவுக்கு புது தலைமை!

politics

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் உடல் நலம் எப்படியிருக்கிறது என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் உள்ளது உள்ளபடி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கண்ணீரோடு தெரிவிக்க, மாவட்டச் செயலாளர்கள் அதைக் கேட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.

தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கோயம்பேட்டிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

விஜயகாந்துக்கு சமீப ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லை. அவரால் சரிவர பேச முடியவில்லை. நடக்க முடியவில்லை. அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. ஆனபோதும் தேமுதிக தலைமை கழகத்தில் கட்சி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் விஜயகாந்த்தைப் பக்குவமாக அழைத்து வந்து மேடையில் அமரவைப்பார்கள். அவர் மாவட்டச் செயலாளர்களைப் பார்த்து லேசாக சிரிப்பார். சிற்சில வார்த்தைகளை மெதுமெதுவாக பேசுவார். அதன் பின் அவரோடு போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டு சில நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே அழைத்துப் போய்விடுவார்கள். இதுதான் சில ஆண்டுகளாகவே தேமுதிகவில் நடந்து வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா பிரச்சாரத்துக்கு கள்ளக்குறிச்சிக்கு சென்றிருந்தபோது, அதிமுக மூத்த நிர்வாகிகள் வேலுமணி, கே.பி.முனுசாமி உட்பட மூவர், சுதீஷ் மூலமாக சாலிகிராம் வீட்டுக்குச் சென்று விஜயகாந்த்தைச் சந்தித்துவிட்டு வந்தவர்கள். அப்போதே முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விஜயகாந்த்தின் பரிதாப நிலைமையை எடுத்துச் சொன்னார்கள். மேலும், இந்த நிலைமையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வரவே முடியாது என்றும் தெரியப்படுத்தியுள்ளார்கள். அதனால் தேமுதிகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கூட்டணியிலிருந்து வெளியேற வைத்துவிட்டதாக அப்போதே பேச்சு எழுந்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சித் தாவிக் கொண்டே இருக்கிறார்கள். தேமுதிக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரைகாமராஜ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேமுதிக நிர்வாகிகளுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் திமுக வில் இணைந்தார். இது மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சில தேமுதிக பிரதிநிதிகளையும் திமுகவில் தொடர்ந்து இணைத்து வருகின்றனர் அமைச்சர்கள். இந்த பின்னணியில்தான்… அக்டோபர் 25 ஆம் தேதி விஜயகாந்த் பெயரில் ஓர் அறிக்கை வெளியானது.

அதில், “எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. நமது கழகம் நிச்சயம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும். நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். மேலும்,மூளைச்சலவை செய்பவர்கள், ஆசை வார்த்தை பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கண்டிப்பதோடு, அடையாளம் கண்டு, தலைமைகழகத்திற்கு தெரிவியுங்கள். இனிவரும் காலங்களில் வளர்ச்சி பாதையை நோக்கி நமது கழகத்தை வலிமை மிக்கதாக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து கொண்டு செல்வோம்”என்று கேட்டுக்கொண்டிருந்தார் விஜயகாந்த். ஆனால் விஜயகாந்தின் அந்த அறிக்கைக்குப் பிறகும் தேமுதிகவினர் திமுகவை நோக்கி பயணிப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில்தான்… “மிச்சம் இருப்பவர்களையாவது காப்பாற்ற வேண்டுமென்றால், இனியும் தாமதப்படுத்தக்கூடாது. உண்மையைச் சொல்லி அனைவரின் ஆதரவுடன் கட்சிக்கு தலைமை ஏற்பதுதான் சிறந்தது” என்று முடிவுசெய்தார் விஜயகாந்தின் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா. அதன் அடிப்படையில் தனக்கு நெருக்கமான மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் முன்கூட்டியே பேசினார் பிரேமலதா. அதிருப்தியில் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் சிலரிடமும் தனிப்பட்ட முறையில் பேசினார்.

அதைத் தொடர்ந்துதான் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அன்று காலை காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

பிரேமலதாவே கூட்டத்துக்கு முன்னால் தொடர்புகொண்டு அழைத்தும் கூட கட்சிக்கு முக்கியமான மாவட்டச் செயலாளர்களான விழுப்புரம் எல்.வி.என்ற எல். வெங்கடேசன், சேலம் இளங்கோவன் உட்பட ஆறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

வழக்கமாகக் கூட்டம் நடைபெறும்போது விஜயகாந்த்தை அழைத்து வருவார்கள். அதுபோல இன்றும் அழைத்து வருவார்கள். அவரது முகத்தையாவது பார்க்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள் பல மாவட்டச் செயலாளர்கள். ஆனால் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, பிரேமலதா உட்பட சிலர் மட்டும் மேடையில் வந்து அமர்ந்தார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் சிலர் தலையை குனிந்தபடி விஜயகாந்த் பிரேமலதாவைப் பற்றி ஏதோ பேசியபடி இருந்திருக்கிறார்கள். பல மாவட்டச் செயலாளர்கள் ஆர்வம் இல்லாமல் அமர்ந்திருந்தார்கள்.

கூட்டத்தின் சூழ்நிலையை அறிந்த பிரேமலதா சோகமான குரலில் பேசத்துவங்கினார்.

“இந்த கூட்டத்தில் நமது தலைவர் கேப்டனின் உடல் நிலையைப் பற்றி உங்களிடம் வெளிப்படையாக தெரிவிக்கப்போகிறேன். இதற்காகத்தான் உங்கள் எல்லாரையும் கூப்பிட்டிருக்கிறேன்” என்று சொன்னதும் , இருக்கையிலிருந்த அனைவரும் ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

“உங்க எல்லாருக்கும் தெரியும்.. கேப்டனுக்கு கிட்னி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஹார்ட் பை பாஸ் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூளைக்கு செல்லும் நரம்பு ஒன்று செயலிழந்துவிட்டது என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தீவிரமாக மருத்துவ சிகிச்சையும் அளித்துவருகிறோம். இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும், இன்று வந்துவிடுவார், நாளை வந்துவிடுவார் உங்களையெல்லாம் பார்ப்பார், பேசுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்”என்று பிரேமலதா பேசும்போதே அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. இதைப் பார்த்து மேடையிலிருந்தவர்கள் மட்டுமல்லாமல்… அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கண் கலங்கிவிட்டார்கள்.

உடனே கடலூர் மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து எழுந்து, “அண்ணி அப்படின்னா கேப்டன் இனிமே கட்சிக்கு வரமாட்டாரா? அப்படின்னா அண்ணி கட்சிக்கு நீங்கள் செயல் தலைவராக பொறுப்பேற்கணும்” என்று கூறினார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்த ஒரு மாவட்டச் செயலாளர் எழுந்து, ‘ அண்ணி நீங்கள் நிரந்தர தலைவராக பொறுப்பேற்கவேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் தரப்பில் இருந்து, ‘அண்ணி நீங்களே பொறுப்பேத்துக்கங்க. பெண் தலைமையிலான கட்சி இப்ப தமிழ்நாட்ல எதுவும் இல்லை. கேப்டன் ஆசியோட நீங்க வெற்றிகரமா செயல்படலாம்” என்றெல்லாம் குரல்கள் எழுந்தன.

அவர்களை எல்லாம் தன் கையால் உட்காரச் சொல்லி அமைதிப்படுத்திய பிரேமலதா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.

“நம்ம கட்சியிலயே சில பேரு கேப்டனை நான் கண்டுகொள்ளவில்லை, சரியாக கவனிக்கவில்லை என்று பேசுகிறார்கள். உங்களுக்கு அவர் கட்சியின் தலைவர். ஆனால் எனக்கு குடும்பத் தலைவர். என் வாழ்க்கையின் தலைவரே அவர் தான். நான் கேப்டனைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வேறு யாரும் பார்த்துக்கொள்ளமாட்டார்கள். நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுக்கொண்டு அவரை பார்த்து வருகிறேன். வேறு ஒருவராக இருந்திருந்தால் எப்பவே விட்டுவிட்டுப் போயிருப்பார்” என்று மீண்டும் கண் கலங்கினார்.

“ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன். கேப்டன் சொன்னவாறு 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. நமது கட்சி கேப்டன் வகுத்த பாதையில் மீண்டும் வெற்றிநடை போட நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று உருக்கமாகப் பேசி முடித்தார் பிரேமலதா.

இதையடுத்து பல மாவட்டச் செயலாளர்களும் எழுந்து வந்து பிரேமலதாவை சுற்றி நின்றுகொண்டு அண்ணி நாங்க உங்க பின்னாடி இருப்போம் கவலைப் படாதீங்க என்று உறுதிகளை கொடுத்துக்கொண்டிருந்தனர்.

“விரைவில் தேமுதிகவின் பொதுக்குழுவைக் கூட்டி அண்ணியாரை தலைவராகவும், கேப்டனை கௌரவ தலைவராகவும் தேர்வு செய்ய ஆலோசனைகள் செய்துவருகிறோம்” என்கிறார்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக மாசெக்கள் சிலர்.

**-வணங்காமுடி**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *