xமக்களுக்குச் சிறந்த பேருந்து சேவை: முதல்வர்!

Published On:

| By Balaji

அரசு பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தி தடங்களை மறு ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவையை மேம்படுத்திட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 26) போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், போக்குவரத்துத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, போக்குவரத்துத்துறைச் சிறப்புச் செயலாளர் நடராஜன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர் பயிற்சி மையங்கள், பல்லவன் போக்குவரத்து பணிக்குழு, தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து அமைப்பு, புதிய பேருந்து சேவைகள், கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை, புதிய திட்டங்கள், இணையதள சேவைகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.

குறிப்பாக எட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்த முதல்வர், அரசு பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ரயில்வே திட்டங்கள் மற்றும் விமான நிலைய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசினைக் குறைத்திடும் வகையில், டீசலுக்குப் பதிலாக மாற்று எரிசக்தி மூலம் அதாவது மின்கலன், இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்குதல் குறித்தும், எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை மையங்கள் அமைப்பது, அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்தும் அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share