ஆலயங்கள் திறப்பு: அண்ணாமலை நன்றி!

Published On:

| By Balaji

தமிழக அரசு  கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆலயங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில்  பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 14) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்  அடிப்படையில் ஆலயங்களை வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் திறப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை முன் வைத்து தமிழக பாஜக போராடி வந்த நிலையில் இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை  தமிழக முதல்வருக்கும், அற நிலைய அமைச்சர் சேகர்பாபுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் அக்டோபர் 14ஆம் தேதி விடுத்துள்ள அறிக்கையில்,  “திருக்கோயில்களில் காலையில் வழிபட்டு வியாபாரத்தைத் தொடங்கும் வணிகப் பெருமக்களுக்கும், தினமும் வழிபடும் வழக்கமுடைய மூத்த குடிமக்களுக்கும், தினப்படி வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் இணைந்து வாரத்தின் எல்லா நாட்களிலும் மக்களோடு இணைந்து தொண்டர்களும் மக்களோடு கோவில்களைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக பெருவாரியான போராட்டங்களை நடத்தினர்.

சென்னை மண்ணடியில் தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோவிலில் நானும் போராட்டம் நடத்தி பேசுகையில் இன்னும் 10 நாட்களில் திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் கோவில்களை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தேன்.

திருவிழா நாட்களிலெல்லாம் திருக்கோயில்கள் மூடி இருக்காமல், மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோயில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசை பாராட்டி வரவேற்கிறோம்.

மக்களின் உண்மையான எண்ணங்களை பிரதிபலிக்கும், எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இந்த நவராத்திரி எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் திரு.மு‌.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share