டாஸ்மாக் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், மே 7ஆம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் வரை மது விற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
டாஸ்மாக்கை மூடும் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இதனால், ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் இயங்குவதற்கு இருந்த தடை விலகி, டாஸ்மாக் திறக்கப்பட்டன. தற்போது முழு ஊரடங்கு நாளான ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக்கில் விற்பனை நடைபெறுகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக் தொடர்பான வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று (ஜூலை 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதே சமயம் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.
முன்னதாக டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை, பாதுகாப்பு, சமூக இடைவெளி உள்ளிட்டவை அடங்கிய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளித்திருந்த தமிழக அரசு, “டாஸ்மாக்கில் டோக்கன் முறை மூலமே மது விற்கப்படுகிறது. 5,338 டாஸ்மாக் கடைகளில் 4,512 கடைகளே திறக்கப்பட்டுள்ளன. ஸ்வைப் மெஷின் மூலம் பணம் செலுத்தும் முறையை அனைத்துக் கடைகளுக்கும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் தொடர்ச்சியாக சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுகிறது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,