டாஸ்மாக் பார் டெண்டர்கள் விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. பார் டெண்டர்களில் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என்று தன் வீட்டு முன்னர் போராட்டம் நடத்திய பார் உரிமையாளர்களுக்கு பதில் அளித்துள்ளார் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. அதோடு அவர் முக்கியமான இன்னொரு கருத்தையும் நேற்று (ஜனவரி 3) வெளியிட்டிருந்தார்.
“டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள 66 நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். என் வீட்டு முன் நின்று அரசியல் உள் நோக்கத்தோடு வந்து எனக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று வந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு அனுப்பினேன். டெண்டர் வெளிப்படைத் தன்மையோடுதான் நடக்கிறது. கிடைக்கக் கூடியவர்கள் சந்தோஷப்படுவார்கள். கிடைக்காதவர்கள் வருத்தப்படுவார்கள். இந்தக் கட்சி, அந்தக் கட்சினு பார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று விளக்கம் அளித்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
வழக்கமாகவே திமுக, அதிமுக என மாறி வந்த ஆட்சிகளில் ஒவ்வொரு ஆட்சியிலும் அந்தந்த கட்சி நபர்களுக்கே இதுபோன்ற வருமான ஆதாரங்களை வைத்து உரிமங்கள் வழங்கப்படும். ஆனால் செந்தில்பாலாஜி, ‘இதில் கட்சி என்ற பேச்சே இல்லை’ என்று குறிப்பிட்டது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்ல… தமிழகம் முழுவதுமுள்ள பார்களை ஓரிரு நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைத்து, பார்களின் உள்கட்டமைப்பையே மாற்றுவதற்கு மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி என்று ஏற்கனவே மின்னம்பலத்தில் எழுதியிருக்கிறோம்.
அதன் ஓர் அங்கமாக சைடிஷ் வருமானம் 90 கோடி ரூபாய் என்ற தலைப்பிலான செய்தியை மின்னம்பலத்தில் ஜனவரி 3 மாலை 7 மணிப் பதிப்பில் வெளியிட்டிருந்தோம். அதில் டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களுக்குப் பின்னாலும் ஒரு பெரும் மாஸ்டர் பிளான் இருப்பதாகத் தெரிவித்திருந்தோம். அது என்ன என்று டாஸ்மாக் வட்டாரங்களில் முழுதாய் விசாரித்தோம்.
“கடந்த ஆட்சியில் நிழல் முதல்வராகவே செயல்பட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தமிழகம் முழுவதும் பரவலாகத் தனக்கு வேண்டப்பட்டவர்கள், அதிமுகவினராகப் பார்த்து ஆர்.ஓ யூனிட் எனப்படும் வாட்டர் யூனிட்டுகளுக்கு அனுமதி கொடுத்தார். மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை போன்றவற்றின் க்ளியரன்ஸ் இந்த ஆர்.ஓ யூனிட்டுகளுக்குத் தேவை. நிலத்தடி நீரைக் குறிப்பிட்ட அளவு எடுப்பதற்கு அரசுக்கு அதற்கேற்ற மாதிரி லிட்டருக்கு இத்தனை பைசாக்கள் எனக் கட்டணம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாத ஏரியாக்களில் ஏற்கனவே ஆங்காங்கே நிறுவனங்களுக்கு பேக்டு வாட்டர் சப்ளை செய்துவரும் சிறு சிறு நிறுவனங்களிடம் இருந்து தண்ணீர் பாட்டில்களைப் பெற்றுக் கொள்ள, அதிமுக பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்படித்தான் தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆட்சியில் நடந்துகொண்டிருந்தது. இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது.
இப்போது அதில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா?
ஏற்கனவே டாஸ்மாக் பார்களுக்கு வாட்டர் சப்ளை செய்துகொண்டிருக்கும் அந்தந்த பகுதியில் இருக்கும் நிறுவனங்களுக்கு அந்தந்த டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.
‘உங்களிடம் ஏற்கனவே வாட்டர் சப்ளை செய்வதற்கான எல்லா அமைப்புகளும் இருக்கின்றன. அதனால் நீங்களே தொடர்ந்து வாட்டர் சப்ளை செய்யுங்கள். ஆனால் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் இரண்டு ரூபாய்க்குதான் கொடுக்க வேண்டும்’ என்பதுதான் அந்தத் தகவல். இது கட்டுபடியாகாது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் ஏற்கனவே தண்ணீர் தொழில் செய்து வரும் அந்த குட்டி குட்டி நிறுவனங்களுக்கு இதன் மூலம் இன்னொரு சலுகையையும் அளிக்க இருக்கிறார்கள்.
அதாவது இதுவரை அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட இனி இரு மடங்கு தண்ணீரை நிலத்தில் இருந்து உறிஞ்சிக்கொள்ளலாம். அந்தத் தண்ணீரை அவர்கள் டாஸ்மாக் பார் தவிர வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழக்கம்போல அதிக விலைக்கு விற்றுக் கொள்ளலாம். ஆனால், டாஸ்மாக் பார்களுக்கு பாட்டிலோடு லிட்டர் இரண்டு ரூபாய்க்குத்தான் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் இழப்பு ஏற்படுவதாக இருந்தால்கூட (இழப்பே இருக்காது) அதை ஈடுகட்டத்தான், தண்ணீர் உற்பத்திக்கு இரட்டிப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதே.
இப்படியாக இரண்டு ரூபாய்க்கு வாங்கப்படும் வாட்டர் பாட்டிலை பத்து ரூபாய்க்கு டாஸ்மாக் மூலமாகவே விற்பனை செய்யவும் முதலில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதாவது மது வாங்கும்போதே தண்ணீரும் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஆலோசனை. ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கு 80 ஆயிரம் குவார்ட்டர் பாட்டில்கள் விற்பனையாகிறது என்றால், அதே அளவுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாட்டர் பாட்டில்களும் விற்பனையாகும். அந்த வாட்டர் பாட்டிலின் அடக்க விலை இரண்டு ரூபாய். போக்குவரத்து, மற்ற கமிஷன்கள் எல்லாம் மூன்று ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட ஒரு வாட்டர் பாட்டின் விலை மொத்தம் ஐந்து ரூபாய்தான். ஆனால் அதை டாஸ்மாக் நிறுவனமே பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்றால், மது மூலம் கிடைக்கும் வருமானத்தைப் போலவே தண்ணீர் மூலமும் பற்பல கோடிகள் கிடைக்கும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள்.
ஆனால், இதில் சட்ட ரீதியான பிரச்சினை வரும். மது விற்பனை செய்யும் டாஸ்மாக்கே தண்ணீர் விற்பதா என்ற கேள்வி பார் உரிமையாளர்கள் சிலர் மூலம் நீதிமன்றத்துக்குச் செல்லும். இதனால் இந்த வாட்டர் நெட்வொர்க்கை வழக்கம்போல பார்களுக்கே கொடுத்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் பத்து ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஒரு லிட்டர் இரண்டு ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலமாக சைடிஷ் போலவே, ஏன்… அதைவிட அதிகமாகவே வாட்டர் பாட்டில் வருமானம் வரும். ஏனென்றால் சைடிஷ் இல்லாமல் முன் கையை முகர்ந்துகொண்டு மது அருந்துபவர்கள் கூட சிலர் உண்டு. ஆனால், தண்ணீர் கலக்காமல் மது அருந்துவது மிக மிக அரிது. எனவே பார்கள் மூலம் வாட்டர் பாட்டில் விற்பனையில் இப்படி ஒரு மெகா மாஸ்டர் பிளான் இருக்கிறது” என்று முடித்தனர் டாஸ்மாக் வட்டாரத்தில்.
இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தால், “ஏற்கனவே எல்லா உள்கட்டமைப்பும் வைத்திருப்பதால் அதிமுகவினர் பலருக்கே வாட்டர் சப்ளை ஒப்பந்தம் இப்போது வரை இருக்கிறது. எல்லா துறைகளிலும் இதுபோல முடிவெடுத்தால் அதிமுகவினர்தான் இதில் பலன் பெறுவார்கள்” என்கிறார்கள் அதிர்ச்சியாய்.
**-வேந்தன்**
[மது பார்கள்… மாஸ்டர் பிளான்: மூர்ச்சையில் திமுக மாசெக்கள்!](https://minnambalam.com/politics/2022/01/03/10/tasmac-bars-tender-dmk-partymen-shock-all-bars-one-network-sendhilbalaji)
[மது பார்கள்: செந்தில்பாலாஜி வீட்டு முன் போராட்டம்](https://minnambalam.com/politics/2022/01/03/18/bar-owners-protest-minister-sendhilbalaji-house)
[பார் டெண்டர்:செந்தில்பாலாஜி விளக்கம்!](https://minnambalam.com/politics/2022/01/03/25/tasmac-%20bar-tender-minister-sendhilbalaji-explain)
[சைடு டிஷ் லாபம் 90 கோடி: செந்தில்பாலாஜி மாஸ்டர் பிளான் பின்னணி!]( https://minnambalam.com/politics/2022/01/03/37/tasmac-bar-side-dish-sales-profit-ninety-crore-rupess-sendhilbalaji-masterplan)
�,