தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில்… அமைச்சர் பெயரைச் சொல்லி கரூர் கும்பல் ஒன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ரவிக்குமார் என்பவர் கரூர் ரமேஷுக்கே போன் செய்து பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் தருமாறு சொன்னீர்களா என்று கேட்டார். அதற்கு கரூர் ரமேஷ் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
இவர்களின் ஆடியோ உரையாடல் ஆதாரத்தோடு மின்னம்பலத்தில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி [பாட்டிலுக்கு ஐந்து ரூபாய்: கரூர் நபரின் கறார் வசூல்- டாஸ்மாக் ஆடியோ அம்பலம்](https://minnambalam.com/politics/2022/04/27/31/five-rupees-bottle-tasmac-collection-karur-ramesh-dmk-sendhilkumar-sendhilbalaji)
என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
நமது செய்தி டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்களிலும் தொழிற்சங்க வட்டாரங்களிலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து மின்னம்பலத்தில் செய்திகள் வந்த அடுத்த நாளே சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கடை எண் 11725 சூப்பர்வைசர் ரவிக்குமார், விற்பனையாளர் லோகநாதன் ஆகிய இருவரையும் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சஸ்பென்ட் செய்திருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம்.
அது மட்டுமல்ல டாஸ்மாக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மறுநாள் அந்தக் கடையை பூட்டி சீல் வைத்துவிட்டது மாவட்ட நிர்வாகம்.
கரூர் கும்பலின் கறார் வசூலை எதிர்த்த டாஸ்மாக் பணியாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைக் கண்டித்து மே 4ஆம் தேதி விழுப்புரத்தில் மாவட்ட அளவில் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகியவை தனித்தனி மாவட்டங்களாக இருந்த போதும் டாஸ்மாக் நிர்வாகத்தைப் பொறுத்தவரை இன்னும் ஒரே விழுப்புரம் மாவட்டம் தான். இந்த அடிப்படையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே மே 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிஐடியு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, பாட்டாளி மக்கள் கட்சி தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட அனைத்துக் கட்சி தொழிற் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். ஆனால் திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிஐடியு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் பல்வேறு விஷயங்களை உடைத்து பேசினார்.
“கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஒரு பைனான்சியர் என்று சொல்கிறார்கள். அவருடன் ஐந்தாறு பேர் கொண்ட கும்பல் இருக்கிறது. தமிழ்நாடு முழுதும் டாஸ்மாக் மதுபான கடை கட்டிட உரிமையாளர்கள், சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரிடம் வசூல் செய்கிறார்கள். பெரும்பாலும் இந்த கும்பல் முதலில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கும் இட உரிமையாளர்களை தான் போய் மிரட்டுகிறார்கள். மாதாமாதம் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். எங்களால் எப்படி அவ்வளவு கொடுக்க முடியும் என்று இட உரிமையாளர்கள் சொன்னால்… ‘கவலைப்பட வேண்டாம். கடையின் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்துதான் விற்கிறார்கள். அதில் ஐந்து ரூபாய் அவர்களிடமிருந்து வாங்கி நீங்கள் கொஞ்சம் காசு போட்டுக் கொடுங்கள்” என்று ஐடியாவும் கொடுக்கிறார்கள்.
ஒரு கார் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கு போய் ரூம் போட்டு தங்கி அந்த அந்த டாஸ்மாக் கடை உரிமையாளர்களிடம் இப்படி மிரட்டுகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் 230 மதுபான கடைகள் இருக்கின்றன. இந்த வகையில்தான் சின்னசேலம் கடை சூப்பர்வைசர் ரவிக்குமாருக்கும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
அவர்கள் ரவிக்குமாரை நேரடியாக சந்திக்க வில்லை. கடை இடத்து உரிமையாளரை சந்தித்து மிரட்டி இருக்கிறார்கள். அதை ரவிக்குமாரிடம் அவர் தெரியப்படுத்தி அதன் பிறகு ரவிக்குமார் கரூர் ரமேஷுக்கு போன் செய்த ஆடியோ தான் வெளியானது.
மிரட்டிய ரமேஷ் கரூரைச் சேர்ந்தவர். அவருக்குப் பின்னணியில் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தான் இருக்க முடியும் என்று நாங்கள் இந்த அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
அந்த ஆடியோ வெளியாகி அசிங்கம் ஆகிவிட்டது என்பதால்தான் அதிகாரிகள் அந்த இருவரையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.
இந்த சஸ்பெண்டுக்கு சொல்லப்படும் காரணம் குறிப்பிட்ட அந்த கடையில் 300 ரூபாய் ஷார்ட்டேஜ் ஆகி இருந்ததாம். பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்றார்கள், கடையில் வெளியாட்கள் இருந்தார்கள் என்று காரணம் சொல்லி மேற்பார்வையாளரையும் விற்பனையாளரையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.
28 ஆம் தேதி ஆய்வுசெய்து அன்றே சஸ்பெண்ட் செய்து 29ஆம் தேதியே அந்தக் கடையை சீல் வைத்து மூடி விட்டார்கள்.
டாஸ்மாக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அந்தக் கடையை மூடி இருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி கொடுத்தால் தான் ஒரு இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை தொடங்க முடியும். அதுபோல ஒரு கடையை மூட வேண்டும் என்றாலும் அதற்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் தான் உத்தரவிட வேண்டும். ஆனால் சின்னசேலத்தில் இந்த விதிகள் எல்லாம் மீறி கரூர் கும்பலின் மிரட்டலுக்கு பயந்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இந்த கடையை மூடியிருக்கிறார்.
அந்தக் கடையில் தினசரி மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது. குறைத்து மதிப்பிட்டால் கூட இந்தக் கடையின் மூலம் ஒரு நாளைக்கு அரசாங்கத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கரூர் கும்பலுக்காக அரசாங்கம் தனது வருமானத்தை கூட இழக்கத் தயாராக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சின்ன சேலம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ரவிக்குமார் விற்பனையாளர் லோகநாதன் மீதான சட்ட விரோதமான சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மூடப்பட்ட அந்த கடையை மீண்டும் திறக்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தில் அத்துமீறி தலையிட்ட அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கரூர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் கும்பலின் உத்தரவுக்கு பணிந்து தினசரி மூன்று லட்சம் வரை வியாபாரம் நடைபெறும் கடையை மூடி டாஸ்மாக் நிறுவனத்துக்கு பெருத்த நட்டம் ஏற்படுத்தும் மாவட்ட மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார் சிஐடியு மாவட்ட தலைவர் முத்துக்குமரன்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் ஒன்றியம் மாநில தலைவர் ரமேஷ் பேசுகையில்,
“சின்னசேலம் கடையின் மேற்பார்வையாளர் ரவிக்குமார் கரூர் ரமேஷோடு பேசும் ஆடியோ வெளியானதும் 28 ஆம் தேதி அவரை திருச்சி மண்டல அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரச் சொல்கிறார்கள். அவரை திருச்சிக்கு வரச் சொல்லிவிட்டு அந்த டாஸ்மாக் கடையில் ஆய்வு மேற்கொள்கிறோம் என்று சொல்லி அதிலும் 300 ரூபாய் குறைகிறது என்று காரணம் காட்டி சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள்.
திமுக பத்து வருஷம் எதிர்க்கட்சியாக இருந்து கஷ்டப்பட்டு இப்போது ஆட்சியை பிடித்துள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி போன்றவர்களால் தான் இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. செந்தில் பாலாஜியை மதுவிலக்கு துறையிலிருந்து மாற்றி முதல்வர் இந்தத் துறையின் பொறுப்பை ஏற்க வேண்டும்” என பேசி இருக்கிறார்.
குறிப்பிட்ட அந்த இரண்டு ஊழியர்களின் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் இறங்க சிஐடியூ முடிவு செய்துள்ளது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்பட்டிருக்கும் இந்த போராட்டத்தை மாநில அளவிலான போராட்டமாக சென்னையில் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்கிறார்கள் சிஐடியூ தொழிற்சங்கத்தினர்.
**வேந்தன்**