தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதனை தமிழ்நாடு வாணிப கழகம்(டாஸ்மாக்) நிர்வகித்து வருகிறது. அரசின் வருவாயில் டாஸ்மாக் மதுபான வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களின்போது மது விற்பனை பல நூறு கோடிகளைத் தொடும். கடந்த பொங்கல் விழாவின்போது 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்தது.
இந்த நிலையில் தற்போது மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பீர் வகைகளின் விலை ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2014ஆம் ஆண்டு பீர் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விலை உயர்ந்துள்ளது. அதுபோலவே, தற்போது விற்பனையாகும் விலையை விட கூடுதலாக குவாட்டர் ரூ.10, ஆஃப் ரூ.20, ஃபுல் ரூ.40 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று பகல் 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. கடைசியாக தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.
2018-19 நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 31,157 கோடி ரூபாய் தமிழக அரசு வருமானம் ஈட்டியுள்ளது. சாதாரண நாட்களில் 70 கோடி ரூபாய் அளவுக்கும், விடுமுறை வார இறுதி நாட்களில் 90 கோடியாகவும் டாஸ்மாக் மதுபானங்களின் விற்பனை இருக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வின் மூலம் தமிழக அரசின் வருவாய் வருடத்திற்கு 2,000 கோடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு குறித்த தகவல் வெளியானதுமே நேற்றிரவே மதுபான பிரியர்களுக்கு மதுக்கடைகளுக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான மது வகைகளில் மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டனர்.
�,