தமிழ்நாடு டாஸ்மாக் உற்பத்தி, வருமானம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் 7ஆவது மாநில மாநாடு மற்றும் 40ஆவது ஆண்டு நிறைவு விழா, நாகை ரோடு , தஞ்சாவூர் தனியார் திருமண மண்டபத்தில் நவம்பர் 13, 14 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அனைத்துத் துறைகளிலிருந்தும் 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் இரண்டாவது நாளில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு பணியாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான கு.சரவணன் கலந்துகொண்டு பேசினார். அவரின் பேச்சு, டாஸ்மாக் நிர்வாகம் உட்பட பல்வேறு தரப்பினரையும் அதிர வைத்துள்ளது.
மாநாட்டில் சரவணன் பேசுகையில், “ஒரு குடும்பம் திருந்த வேண்டும் என்றால் முதலில் தாய் – தகப்பன் ஒழுங்காக இருக்க வேண்டும். அவர்கள் சரியாக இல்லை என்றால் எந்த ஒரு பிள்ளையும் ஒழுங்காக இருக்காது. ஒரு திருடனைத் தூக்கு மேடையில் போடும்போது, ‘ஏன் இவ்வளவு பெரிய கொள்ளைக்காரனாக இருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த திருடன், ‘சிறு வயதில் என் அம்மா தோளில் தூக்கிக்கொண்டு செல்லும்போது, பக்கத்தில் ஓர் அம்மா கூடையில் மாம்பழம் எடுத்து வரும். அதிலிருந்து ஒன்றை நான் எடுத்துக்கொள்வேன். அதை ஊக்குவித்து என் அம்மா வாங்கி வைத்துக்கொள்ளும். என் அம்மா அன்று கண்டித்திருந்தால் இன்று தூக்கு மேடைக்கு வந்திருக்க மாட்டேன்’ என்று சொன்னான்.
அப்படிதான் டாஸ்மாக். நாங்கள் ஒரு ரூபாய் அதிகமாக விற்பனை செய்தபோதே எங்களைக் கண்டித்திருந்தால் நாங்கள் திருடனாகவோ, இந்த சமுகத்தால் மிகப் பெரிய அளவில் ஒதுக்கப்பட்ட மக்களாகவோ பார்க்கப்படப் போவதில்லை. பிச்சை எடுக்கிற எங்களிடம் பிச்சை வாங்கி தின்ற அதிகாரிகள்தான் டாஸ்மாக்கில் இருக்கிறார்கள், அது குரூப் 1 அதிகாரிகளாக இருந்தாலும் சரி, ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தாலும் சரி. யாராவது யோக்கியம் என்றால் என் மீது கேஸ் போட்டு, என்னை கோர்ட்டுக்கு இழுத்து வாதாடச் சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.
டாஸ்மாக் உற்பத்தி பொருள் விலை என்ன தெரியுமா? கம்பெனியில் இருந்து வெறும் 20 ரூபாய்க்கு வாங்கி ஒரு பாட்டிலை 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். அநாவசியமா ஒரு பாட்டிலுக்கு 80 ரூபாய் அரசாங்கத்துக்குப் போகிறது. குடிகாரன் வயிற்றில் அடித்து கவர்ன்மெண்ட் நடத்துகிற நீங்கள், 5, 10 வாங்குகிற எங்களைத் திருடன் என்றால், 80 ரூபாய் அதிகம் வாங்குகின்ற நீங்கள் யார்… கொள்ளைக்காரனா இல்லையா?
இன்று நம்பர் 1 வருமானமாக டாஸ்மாக்தான் இருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியுமா? கொரோனா காலத்தில் பால், காய்கறி, மளிகை என அனைத்தும் கடைகளும் மூடப்பட்டன. பள்ளிக்கூடமும் மூடப்பட்டது. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஆனால், டாஸ்மாக் கடையை மட்டும் திறந்து வைத்திருந்தீர்கள்.
எங்களுக்கு ஒரு மந்திரி வந்திருக்கிறார். ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தாலும் திகார் ஜெயிலில் போட்டுவிடுவேன் என்கிறார்.
ஆனால், அவர் ஊழல் வழக்கில் கோர்ட்டுக்குப் போவதில்லை. பல கோடி ஊழல் செய்துவிட்டார் என்று கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. அவரை கோர்ட்டுக்கு வரச் சொல்லுங்கள் என்று ஜட்ஜ் சொல்கிறார். ஆனால், இவர் பணிச் சுமை அதிகமாக இருக்கிறது என்று கோர்ட்டுக்குப் போக முடியாமல் நிற்கிறாராம்.
இப்படி இருக்கிற நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். டாஸ்மாக் உற்பத்தி செய்கிற பொருளை என்ன விலைக்கு நீங்கள் கம்பெனியிலிருந்து வாங்குகிறீர்கள்? உற்பத்தி விலை என்ன? எவ்வளவு அதிகமாக வைத்து விற்பனை செய்கிறீர்கள்? அரசுக்கு எவ்வளவு போகிறது? எவ்வளவு பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறீர்கள்?…
இதில் ஒரு வேடிக்கை… ஊழியர்கள் போனஸ் கேட்டால் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்கிறீர்கள். நஷ்டத்தில் போகிறது என்றால் டாஸ்மாக்கை மூடிவிட வேண்டியதுதானே. 20 ரூபாய் பாட்டிலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்தால் எப்படி நஷ்டத்தில் போகும்… இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை யாராவது சொல்வார்களா? இப்படி இருக்கும் நிலையில் பாட்டில் உற்பத்தி பொருள் உட்பட அனைத்துக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மாநாட்டில் பேசியது பற்றி மின்னம்பலம் சார்பில் சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம்.
“டாஸ்மாக் பணியாளர்கள் 35,000 பேர் வரை இருந்தார்கள். தற்போது 27,000 பணியாளர்கள்தான் இருக்கிறார்கள். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. குடோனிலிருந்து இறக்கும்போது பாட்டில்கள் உடைகிறது. அந்த முதலீடுகளை கடையில் உள்ள விற்பனையாளர்களும் மேற்பார்வையாளர்களும் கொடுக்க வேண்டும். கடைகளுக்கு குறைவான வாடகை கொடுக்கிறது டாஸ்மாக் நிறுவனம். மேற்கொண்ட வாடகை எங்கள் பணியாளர்கள் கொடுக்கிறார்கள். கரன்ட் பில் கட்ட வேண்டும். வருபவர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும். சொல்லமுடியாத விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, பாட்டிலுக்கு ஒரு ரூபாய் அதிகமாக விற்பனை செய்தால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன், சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டுகிறார் அமைச்சர். இது என்ன நியாயம்? அதனால்தான் மது பாட்டில்கள் என்ன விலைக்குக் கொள்முதல் செய்கிறார்கள்? டாஸ்மாக் கடையிலிருந்து மது பிரியர்களுக்கு என்ன விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என உண்மையை மக்கள் தெரிந்துகொள்ளட்டும் என்று வெள்ளை அறிக்கையைக் கேட்டுள்ளேன்” என்றார் சரவணன்.
**-வணங்காமுடி**
�,