டாஸ்மாக் மதுபான டெண்டர்களில் இதுவரை இருந்த நடைமுறையை மாற்றி தமிழ்நாடு முழுமைக்கும் பார்களை பொதுவான நெட்வொர்க்கின் கீழ் கொண்டுவர மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கட்சியினருக்கு பார் டெண்டர்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதால்.. . திமுக மாசெக்கள், அமைச்சர்களிடமே அதிருப்தி நிலவுகிறது. “ ஏற்கனவே மது தயாரிக்கும் கம்பெனிகள் எல்லாம் பார்ட்டி ஃபண்டுனு கொடுத்துடறாங்க. இந்த நிலையில பார்ல விக்கிற கடலைப் பாக்கெட், முறுக்கு பாக்கெட், வாட்டர் பாட்டில் விற்பனையும் கூட பெரிய நிறுவனங்களே மொத்தமா வித்து காசு பாத்துட்டு போயிடுச்சுன்னா கட்சிக்காரனுக்கு நாம என்ன பதில் சொல்றது? முதல்வரை பார்க்கும்போது இதை அவர்கிட்ட எப்படியாவது எடுத்து சொல்லுங்க” என்று மாசெக்கள் சீனியர் அமைச்சர்களிடம் குமுறியிருக்கிறார்கள். . சீனியர் அமைச்சர்களும் மாசெக்களின் இந்த அதிருப்தியை முதல்வரிடமே நேரடியாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் செந்தில்பாலாஜி இது தொடர்பாக மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரித்து முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டார் என்றும் அவரது தரப்பினர் கூறி வருகிறார்கள்.
திமுக மாவட்டச் செயலாளர்களின் குமுறல் இப்போது டாஸ்மாக் அட்டைப் பெட்டி விவகாரத்தில் நிஜமாகிவிட்டது.
டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களோடு வரும் அட்டைப் பெட்டிகள் அதன் பின் விற்பனை செய்யப்படும். இந்த காலி அட்டைப் பெட்டிகளை ஆங்காங்கே கட்சியினர் வாங்கி வந்தனர். இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. காலி அட்டைப் பெட்டிகளை வாங்குவதற்கு தமிழகம் முழுவதும் ஒருவருக்கே டெண்டர் கொடுத்திருப்பதால் திமுகவினர் மனம் குமறிபோயிருக்கிறார்கள்.
இதுபற்றி விசாரித்தோம்.
“கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு பிராந்தி பாட்டில்கள் வரும் அட்டைப் பெட்டியின் விலை ஒன்று 3 ரூபாயும், பீர் பாட்டில்கள் வரும் அட்டைப் பெட்டி விலை 2.50 ரூபாய் என்றும் விற்றார்கள். உள்ளூர் மாவட்ட கட்சிக்காரர்கள் இதை டெண்டர் எடுத்து சம்பாதித்து வந்தார்கள்.
தற்போது திமுக ஆட்சி மாறிய பிறகு பிராந்தி பாட்டில்கள் வைத்த அட்டைப் பெட்டி 3.40 என்றும், பீர் பாட்டில்கள் வரும் அட்டைப் பெட்டி 2.65 என்றும் விலை ஏற்றிவிட்டார்கள். அதுமட்டுமல்ல… , அந்தந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் அட்டைப் பெட்டிகளை எடுத்துச் சம்பாதிக்க முடியாத அளவிற்கு தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் அட்டைப் பெட்டிகளை ஒரே ஆளுக்கு டெண்டர் கொடுத்துவிட்டார்கள். அந்த நபரிடம் சப் டெண்டர் எடுக்க ஆண்டுக்கு ஒரு கடைக்கு 14 ஆயிரம் கேட்கிறார்கள்” என்று குமுறுகிறவர்கள் தொடர்ந்தனர்.
“அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் காலி அட்டைப் பெட்டிகளை அதிமுக மற்றும் திமுகவினர் டெண்டர் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தோம். பிராந்தி, ரம், விஸ்கி போன்ற குவார்ட்டர் பாட்டில்கள் வரும் மூன்று அட்டைப்பெட்டி சேர்ந்தால் ஒரு கிலோ எடையிருக்கும். பீர் பாட்டிகள் பெட்டி நான்கு சேர்ந்தால் ஒரு கிலோ வரும். அட்டைப் பெட்டி ஒரு கிலோ விலை இன்றைய மதிப்பு 18 ரூபாய்.
குவார்ட்டர் பாட்டில் பெட்டி ஒன்று 3.50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடையிலிருந்து எடுக்கிறோம், மூன்று பெட்டியை சேர்த்தால்தான் ஒரு கிலோ வரும். மூன்று பெட்டி விலை 10.50,+ வாட் வரி 50 பைசா சேர்த்தால் 11 ரூபாய் அடக்கம் வரும். பீர் பாட்டில்கள் பெட்டி 2.75 என்ற விலையில் நான்கு பெட்டியைச் சேர்த்தால்தான் ஒரு கிலோ எடை வரும்.
மாதம் 90 ஆயிரம் குவார்ட்டர் பாட்டில்கள் பெட்டியும், 80 ஆயிரம் பீர் பாட்டில்கள் பெட்டிகளும் கிடைக்கும். மொத்தம் 50 ஆயிரம் கிலோ கிடைக்கும். கிலோ 18 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் மொத்தம் 9 லட்சத்திற்கு விற்பனை செய்வோம்.,
அதில் டாஸ்மாக் மாவட்ட நிர்வாகத்துக்கு வாட் வரியுடன் சேர்த்து 5.5லட்சம் செலுத்திட வேண்டும். மாவட்டம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்க நான்கு லாரிகள் வேண்டும். லாரி வாடகை, ஓட்டுநர் சம்பளம், லோடிங் செய்யும் ஆட்கள் சம்பளம், டீசல் செலவுகள் சேர்த்தால் மொத்தம் ஒரு லாரிக்கு 75 ஆயிரம் செலவாகும். நான்கு லாரிக்கு 3 லட்சம் செலவாகும். மீதி 50 ஆயிரம்தான் கிடைக்கும்.
இந்த விவகாரத்திலும் இப்போது மொத்தமாய் பெரிய நிறுவனங்கள் நுழைந்திருக்கின்றன. அட்டைப் பெட்டி டெண்டர் கேட்கப் போனால், சங்கர் எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனம், ‘நாங்கதான் அட்டைப் பெட்டி டெண்டர் மொத்தமா எடுத்திருக்கோம். எங்களுக்கு பணம் கட்டிட்டு எடுத்துக்கங்க’ என்று சொல்கிறார்கள். 2022 ஜனவரி 1ஆம் தேதியிலேர்ந்து டிசம்பர் 31 ஆம் தேதிவரை சங்கர் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்டத்துல கொடுத்திருக்காங்க. எலல மாவட்டத்துலயும் இதே நிறுவனம்தான் இந்த டெண்டரை எடுத்திருக்காங்க.
கடந்த ஆட்சியில் வருடத்திற்கு 50 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் கேட்பார்கள். மனசார கொடுத்து வந்தோம். ஆனால் இந்த நிறுவனத்தினரோ, வரும் லாபத்தைவிட அதிகமாக கேட்கிறார்கள். இப்படி இருந்தால் கட்சிக்காரன் நிலைமை என்னாகும். கேட்டா இதுதான் செந்தில்பாலாஜி மாடல்னு சொல்றாங்க. செந்தில்பாலாஜி மாடலை எதிர்த்து எங்க போய் நாங்க முட்டிக்கிறது?” என்று கேட்கிறார்கள்.
**-வணங்காமுடி**
[மதுபார்கள் மாஸ்டர் பிளான்](https://www.minnambalam.com/politics/2022/01/03/10/tasmac-bars-tender-dmk-partymen-shock-all-bars-one-network-sendhilbalaji)
�,”