தமிழக திருக்கோயில்களில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி கேதார்நாத்தில் இருந்து பிரதமர் மோடி ஆற்றிய உரை பாஜகவினர் முன்னிலையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இப்போது இது தொடர்பான புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 5ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பிரதமர் மோடி ஆதிசங்கரரின் சிலையை நிறுவி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வை தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட திருக்கோயில்களில் எல்இடி திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து… ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலை, ராமேஸ்வரம் கோயிலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரன் என ஒவ்வொரு கோயிலிலும் தமிழக பாஜகவின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு மோடியின் உரையை கோயில் வளாகத்துக்குள் அமர்ந்து பார்த்தனர்.
ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நிதிக்கு எதிரே உள்ள கருத்துரை மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கூடி பிரதமர் மோடியின் உரையை பார்த்தனர்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வைணவ செயற்பாட்டாளர் ரங்கராஜ நரசிம்மன் இதை கடுமையாக எதிர்த்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “கோவில் வளாகத்துக்குள் அரசியல் நிகழ்ச்சியை சட்டவிரோதமாக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தியுள்ளார். இதேபோல மற்ற அரசியல் கட்சிகளும் கோவிலுக்குள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினால் என்ன ஆவது? இது சட்டவிரோதமான செயல். சனாதன தர்மத்துக்கும் எதிரான செயல்” என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கோவிலுக்குள் அரசியல் நிகழ்ச்சியை நடத்தியது தொடர்பாக தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைமீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ரங்கராஜன் நரசிம்மன். இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இருந்து ரங்கராஜ நரசிம்மனுக்கு சிஎஸ்ஆர் எனப்படும் ரசீதையும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் தறைக்கு உட்பட்ட திருக்கோயில்களில் பாஜக தலைவர்கள் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்து அதை கூட்டமாக அமர்ந்து பார்த்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் ஆகியோர் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர். இந்து சமய அறநிலையத் துறை என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே இந்த சர்ச்சை பற்றி கடந்த நவம்பர் 14 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்தார்.
“பிரதமர் மோடியின் ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவை தமிழகத் திருக்கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்தது ஒரு ஆன்மீக நிகழ்ச்சி. தமிழக இந்து சமய அறநிலையத்துறை தான் ஏற்பாடு செய்தது. நான் ஒரு சாமானியனாக அதில் கலந்து கொண்டேன். நான் மட்டுமல்ல வேறு யார் வேண்டுமானாலும் அதில் கலந்து கொண்டிருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. மேலும் இதே போல எதிர்காலத்திலும் கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவோம்” என்று விளக்கம் அளித்திருந்தார் அண்ணாமலை.
மோடியின் உரையை திருக்கோயில்களில் பாஜகவினர் முன்னிலையில் ஒளிபரப்பு செய்தது தமிழக இந்து சமய அறநிலையத்துறை தான் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய பிறகும் இது தொடர்பாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவோ அத்துறையின் அதிகாரிகளோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதுதொடர்பாக நாம் அமைச்சரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் வெள்ள நிவாரண பணிகளில் பிஸியாக இருந்தார். அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் போனை எடுக்கவே இல்லை. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய போதும் அவரிடமிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை.
இந்த அளவுக்கு தமிழ்நாடு அரசு இதில் மௌனம் காப்பது ஏன் என்று நாம் தொடர்ந்து விசாரித்ததில் கோட்டை வட்டாரத்தில் இருந்து புதிய தகவல்கள் நமக்கு கொட்டின.
” நவம்பர் 5ஆம் தேதி கேதார்நாத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு 2 வாரங்கள் முன்பு தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஒன்றிய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்.
கேதார்நாத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டு அதை தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். அந்தப் பட்டியலை உங்களுக்கு அனுப்புகிறோம். இதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை ’என்று சற்று உரிமையாகவும் தனக்கே உரிய உத்தரவு தொனியிலும் சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். இதுபற்றி முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசித்து பதில் தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமனிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
அந்த உரையாடலைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், கும்பகோணம் திருநாகேஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் கோயில், திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், சுவாமி மலை சுவாநாதர் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகிய கோயில்கள் அடங்கிய பட்டியல் இறையன்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. (இதேபோல புதுச்சேரியில் ஏழு கோயில்களிலும் பிரதமர் மோடியின் உரை நேரடி ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி என்பதால் அங்கே எந்த உரையாடலுக்கும் தேவை எழவில்லை)
ஒரு வாரம் கடந்த நிலையில் இறையன்புவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் நிர்மலா சீதாராமன் மீண்டும் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ‘பிரதமர் நிகழ்ச்சியை தமிழகத் திருக்கோயில்களில் நேரடி ஒளிபரப்பு பற்றி உங்களிடம் கேட்டிருந்தேன். முதல்வரிடம் பேசினீர்களா? ஏற்பாடுகள் எந்த நிலையில் இருக்கிறது?’ என்று கேட்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
அதற்கு இறையன்பு, ‘முதல்வரிடம் பேசியிருக்கிறேன். சில தினங்களில் பதில் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். அப்போது நிர்மலா சீதாராமன், ‘வேண்டுமென்றால் இது தொடர்பாக நானே தமிழக முதல்வரிடம் பேசட்டுமா?’ என்று கேட்டுள்ளார். ‘தேவையில்லை நான் ஏற்கனவே பேசிவிட்டேன் என்று பதில் கூறியுள்ளார் இறையன்பு.
இந்த உரையாடல் நிகழ்ந்த சில தினங்களில் பிரதமர் மோடியின் கேதார்நாத் நிகழ்ச்சியை தமிழக திருக்கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டுதான் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது இந்நிகழ்ச்சியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை தான் ஏற்பாடு செய்தது என்று தெளிவாக குறிப்பிட்டார். தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவோ, அதிகாரிகளோ இது தொடர்பாக விளக்கம் அளிக்காமல் மௌனம் காப்பதற்கு காரணமும் இதுதான்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற்றும் வரும் ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய அறிக்கையை ஆளுநர் தனக்கு சமர்ப்பிக்கக் கோரியிருந்தார். அதை ஒட்டி அனைத்துத் துறைச் செயலாளர்களும் இது தொடர்பான விளக்க அறிக்கையை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இப்போது ஒன்றிய அரசின் உத்தரவையடுத்து தமிழக கோயில்களில் பிரதமர் மோடியின் கேதார்நாத் உரை மாநில அரசால் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் நிகழ்வுகள் ஒன்றிய- மாநில அரசுகளின் இணக்கப் போக்கா அதையும் தாண்டிய போக்கா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்திருக்கின்றன.
**-வேந்தன்**
[கோவில்களை அரசியல் கூடாரமாக்கிய பாஜக: எதிர்த்தவருக்கு கொலை மிரட்டல்](https://minnambalam.com/politics/2021/11/12/31/tamilnadu-bjp-anti-hindu-srirangam-temple-annamalai-rangaraja-narasimman)
[கோயில்களில் மோடி நிகழ்ச்சி: அறநிலையத்துறையின் ஏற்பாடுதான் -அண்ணாமலை விளக்கம்!](https://minnambalam.com/politics/2021/11/14/34/bjp-annamalai-explain-sritangam-temple-modi-function-tamilnadu-govt-organaise)
[ஸ்ரீரங்கம் கோவிலில் அரசியல் கூட்டம்: அண்ணாமலை மீது வழக்குப் பதிவு?](https://minnambalam.com/politics/2021/11/13/32/bjp-annamalai-srirangam-temple-political-meeting-rangaraja-narasimman-police-complaint-csr-fir)
�,”