அடுத்தும் எடப்பாடிதான் முதல்வர்: திண்டுக்கல் சீனிவாசன்

Published On:

| By Balaji

முதல்வர் வேட்பாளர் குறித்து மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் 28ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழுவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். முடிவில், முதல்வர் வேட்பாளர் பற்றி அக்டோபர் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

செயற்குழுக் கூட்டத்திற்குப் பின் நடந்த மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைக் கூட்டத்தைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் புறக்கணித்தார். இதனால் இருவருக்கும் இடையே இடைவெளி விழுந்தது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் இருவரையும் மாறி மாறி பேசி சமாதானப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் நேற்று (செப்டம்பர் 30) செய்தியாளர்களைச் சந்தித்த வனத் துறை அமைச்சர் சீனிவாசன், “முதல்வர் வேட்பாளருக்கு போட்டியெல்லாம் எதுவும் இல்லை. அதுகுறித்து ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுவிட்டது. ஊடகங்கள்தான் போட்டி என செய்தி வெளியிடுகின்றன. முதல்வர் வேட்பாளர் பற்றி வரும் 7ஆம் தேதி முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

அதிமுகவில் எந்தப் பிரச்சினையுமில்லை என்ற அமைச்சர், “தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களைத் தேடி வந்து பிரச்சினைகளை தீர்த்துவைத்து வருகிறோம். தமிழகத்தில் அடுத்தும் அதிமுக ஆட்சிதான் நடைபெறும். முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான் வருவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார் சீனிவாசன். ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், என்ன முடிவை அறிவிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share